Published : 25 Apr 2014 07:52 am

Updated : 25 Apr 2014 07:53 am

 

Published : 25 Apr 2014 07:52 AM
Last Updated : 25 Apr 2014 07:53 AM

வாய்ப்பல்ல, அதிகாரம் இது!

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நிகழ்வான இந்தியத் தேர்தலை தேசத்தின் திருவிழா என்று குறிப்பிட்டால் அது மிகையான வர்ணணையாக இருக்காது என்று நினைக்கிறேன். ஏனைய திருவிழாக்களைப் போலவே விந்தைகளுக்கும் விசித்திரங்களுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாத இந்தியத் தேர்தலின் வெவ்வேறு வடிவங்களை தேசத்தின் வெவ்வேறு பகுதிகளில் பார்க்கும்போது கிடைக்கும் சுவாரஸ்யம் அலாதியானது.

இந்தியாவின் முதல் தேர்தலைப் பற்றிப் படிக்கும்போது பல விஷயங்கள் ஆச்சர்யம் அளிக்கக்கூடியவையாக இருக்கும். பாலைவனத்தில் ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு, சாப்பாடு கட்டிக்கொண்டு ஓட்டுப் போட வந்தவர்கள் கதைகள், முதல் நாளே வந்து காத்திருந்து ஓட்டுப் போட்டவர்கள் கதைகள், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அழுது புரண்டவர்கள் கதைகள், வயதானவர்களைத் தூக்கிக்கொண்டுவந்து ஓட்டுப் போட வைத்தவர்கள் கதைகள்... இந்தக் கதைகளுக்கெல்லாம் கொஞ்சமும் பஞ்சம் இல்லாத கதைகள் இப்போதும் இருக்கின்றன. இன்னமும் நீளும் என்றே தோன்றுகிறது. காரணம்... இந்நாட்டின் மக்களுக்கு இந்தத் தேர்தல் அமைப்பின் மீது இருக்கும் ஆழமான நம்பிக்கை.


இந்திய ஜனநாயகத்தின் மீது முன்வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களில் முக்கியமானது நம்முடைய தேர்தல் முறை. நிச்சயம் ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு முறைதான் இது. ஆனால், விமர்சிப்பவர்கள் பலரும் சொல்வதுபோல நிராகரிக்கக் கூடிய முறை இல்லை அது என்பதை இந்தப் பயணம் வலுவாகவே உறுதி செய்தது. காஷ்மீரிகள் வாக்களிப்பதற்கு ஒரு நியாயம் இருக்கிறது என்றால், அசாமிகள் வாக்களிப்பதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. தமிழகத்திலும் உத்தரப் பிரதேசத்திலும் அந்த நியாயங்கள் வேறுபட லாம். ஆனால், தங்கள் தலையெழுத்தைத் தீர்மானிப்பவர்களின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் தங்க ளுக்குப் பங்கிருக்க வேண்டும் என்பதில் மக்களிடத்தில் இருக் கும் உறுதிப்பாடு அசாத்தியமானது. இந்த விஷயத்தில் நாட்டின் எல்லாக் குடிமக்களுக்கும் அவர்களுடைய இந்த உரிமையை உறுதிசெய்யும் தேர்தல் ஆணையத்தின் பணி மகத்தானது.

இரண்டு ஓட்டுகளுக்கு ஒரு சாவடி

சத்தீஸ்கரில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் ஏராளமான கிராமங்கள் உண்டு. சுற்றிலும் வனம்தான். சாலை, மருத்துவமனை, மின்சாரம் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் கோரியா மாவட்டத்தைச் சேர்ந்த சேரதந்த். தேவராஜ் சேர்வா, அவருடைய மனைவி பூளாவாட்டி சேர்வா, மகன் மஹிபால் சேர்வா இந்த மூவருக்காக மட்டும் இங்கே ஒரு வாக்குச்சாவடி ஒவ்வொரு தேர்தலின்போதும் அமைக்கப்படுகிறது. மலைப் பாதையில் ஏராளமான சங்கடங்களுக்கு இடையே பயணிக்கிறது தேர்தல் அலுவலர்கள் குழு, கூடவே பாதுகாப்புப் படையினர் ஐந்து பேருடன். இப்போது பூளாவாட்டி சேர்வா இறந்துவிட்டார். இரு ஓட்டுகளுக்காகப் பயணிக்கிறார்கள். தேவராஜ் சேர்வாவுக்குக் கல்வி, மருத்துவம், மின்சாரம் எல்லாவற்றையும்விட கோடையில் கிணற்றில் தண்ணீர் ரொம்ப ஆழத்துக்குச் சென்றுவிடுவதுதான் பிரச்சினை. ஆனால், இதையெல்லாம் அரசாங்கத்திடம் எப்படிக் கேட்க முடியும் என்று அவருக்கு அவரே ஆறுதல்படுத்திக்கொள்கிறார். அவரைச் சந்திக்க நாம் செல்வதையே அவர் ஒரு பெருமையாக நினைப்பார் என்று சொல்கிறார்கள் அதிகாரிகள்.

உலகின் மிக உயரமான வாக்குச்சாவடி

உலகிலேயே உயரமான வாக்குச்சாவடி இமாச்சலப் பிரதேசத்தின் லஹௌல் - ஸ்பிட்டி மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் ஹிக்கிம்தான். மண்டி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட லாங்சே, கோமிக் இரு கிராமத்தினருக்காக அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி இது. இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மனைவி பிரதீபா சிங் இரு முறை வென்ற தொகுதி மண்டி. முன்பு வீரபத்திர சிங் முன்னோர் ஆண்ட இடத்தில் இப்போது அவர் ஆள்கிறார் என்கிறார்கள். இரு கிராமங்களிலும் மொத்தம் 80 வீடுகள். 483 பேர் இருக்கிறார்கள். இவர்களில் 321 பேர் வாக்காளர்கள்.

எந்நேரமும் பனிப்பொழிவில் இருக்கும் இந்தப் பகுதி குளிர் காலத்தில் முழுமையாகப் பனியால் சூழப்பட்டு, முற்றிலுமாக ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுவிடும். இதுவரை ஒரு வேட்பாளர்கூட இங்கு ஓட்டு கேட்க வந்தது கிடையாதாம். ஆனாலும், மக்கள் அசரவில்லை. கடந்த மக்களவைத் தேர்தலில்கூட 69% பேர் ஓட்டு போட்டிருக்கிறார்கள். “இந்த மாதிரி ஒரு பகுதிக்கு வெளியூர்க்காரர்களான வேட்பாளர்கள் வரவில்லையே என்று வருத்தப்படுவது நியாயமாக இருக்காது. ஏனென்றால், கிட்டத்தட்ட நாங்கள் ஒரு தீவு மாதிரியான இடத்தில் இருக்கிறோம். அவர்கள் வந்து செல்வது ரொம்ப சிரமம். நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் என்னவென்றால், எங்களுக்குத் தேவையான வசதிகளை அவர்கள் செய்துகொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான்” என்கிறார்கள். முன்பைக் காட்டிலும் கல்வி, சுகாதார வசதிகள் மேம்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். தொலைத்தொடர்பு வசதியும் போக்குவரத்து வசதியும் மேம்படுத்தப்பட வேண்டும் என்று கோருகிறார்கள்.

நாட்டின் முதல் வாக்காளர்

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர்களில் ஒருவரான ஷ்யாம் சரண் நெகியும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்தான். இதே மண்டி தொகுதியில்தான் அவருடைய கல்பா கிராமமும் இருக்கிறது. ஓய்வுபெற்ற ஆசிரியரான ஷ்யாம் சரண் நெகிக்கு 97 வயது ஆகிறது. முதல் மக்களவைத் தேர்தல் நாடெங்கும் பரவலாக 1952-ல் நடத்தப்பட்ட நிலையில், பருவநிலையை உத்தேசித்து இங்கு முன்கூட்டியே அக்டோபர் 1951-ல் வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. அப்போது தொடங்கி ஒரு உள்ளாட்சித் தேர்தலைக்கூடத் தவறவிட்டதில்லை ஷ்யாம் சரண் நெகி. “என் மனைவி ஹிரா மணியும் அப்படித்தான்” என்கிறார். “நல்ல தண்ணீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் இதைத்தான் வேட்பாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லும் இந்தப் பெரியவருக்கு இன்றைய அரசியல்வாதிகள் மீது கடுமையான அதிருப்தி இருக்கிறது. ஆனாலும், வாக்களிப்பது நம்முடைய கடமை என்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா அவரை நேரில் சந்தித்து வணங்கியதைக் கௌரவமாகக் குறிப்பிடுகிறார். நாம் மாற்றத்தை விரும்புகிறோம் என்றால், நாமே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று சொல்லும் ஷ்யாம் சரண் நெகி தன் மருமகள்களில் ஒருவரை ஊராட்சித் தேர்தலில் நிறுத்திச் சில காரியங்களைச் சாதித்துக்காட்டியும் இருக்கிறார்.

ஏன் வாக்களிக்கிறார்கள்?

மக்களிடம்தான் உண்மையில் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியும். ஜார்க்கண்டில் நான் சந்தித்த பெரியவர் நிஷிகாந்த் ஒரு பெரிய பாடம். “நாட்டின் சர்வ அதிகாரங்களையும் பெறவிருப்பவர்களைத் தீர்மானிக்க ஒரு சாமான்யனுக்குக் கிடைக்கும் அதிகாரம் இது. இந்த வாய்ப்பு நமக்குத் திடீரென்று ஒரு நாளில் கிடைத்தது அல்ல. இருநூறாண்டு சுதந்திரப் போராட்டம் மட்டுமே வாங்கிக்கொடுத்ததும் அல்ல. இன்னும் பல நூற்றாண்டு வரலாறும் போராட்டங்களும் தியாகங்களும் இந்த ஓட்டுரிமைக்குப் பின்னால் இருக்கின்றன. அரசியல்வாதிகள் நம்மைச் சுரண்டுகிறார்கள்; நம் நம்பிக்கைகளைக் குலைக்கிறார்கள்; நம்மைத் தோற்கடிக்கிறார்கள்தான். ஆனாலும், நாம் விட்டுவிட முடியாது; விட்டுவிடக் கூடாது.”

திருச்சியில் இந்த முறை நான் சந்திக்கத் தவறவிட்ட ஓர் ஆளுமை குல்சும் பீபி. சில ஆண்டுகளுக்கு முன் நான் சந்தித்தபோதே அவருக்கு வயது 116. இவருடைய சிறப்பு என்னவென்றால், எந்தத் தேர்தலிலும் வாக்களிக்கத் தவறாதவர் இவர். இத்தனைக்கும் முதுமையில் ஏழ்மையின் கொடூரப் பிடியில் சிக்கியிருந்தவர். நத்தர்ஷா பள்ளிவாசலில் நாளெல்லாம் உட்கார்ந்திருக்கும் குல்சும் பீபிக்கு அங்கு வருவோர் போவோர் கொடுக்கும் ஐந்து பத்துதான் வருமானம்; அவர்கள் வாங்கிக்கொடுப்பதுதான் உணவு. எந்த வகையிலும் அரசியல்வாதிகள் மீது அவருக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனாலும் ஏன் வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னார்: “தேர்தலில் வாக்களிப்பது அரசியல்வாதிகளுக்காக அல்ல, எனது கடமையை நிறைவேற்ற. என்றேனும் ஒரு நல்ல மனிதன் இந்த மக்களுக்கு நன்மையைச் செய்யக்கூடும். எனவே, நான் உயிரோடு இருக்கும் வரை எனது கடமையைச் செய்துகொண்டே இருப்பேன்.”

குல்சும் பீபி இப்போது எங்கிருக்கிறார் என்று தெரிய வில்லை; நல்ல உடல் நலத்தோடு இருந்தால், நிச்ச யம் அவர் தன் கடமையைச் செய்திருப்பார்!

தொடர்புக்கு: samas@kslmedia.in


நாடாளுமன்ற தேர்தல்இரண்டு ஓட்டுக்களுக்கு ஒரு சாவடிநாட்டின் முதல் வாக்காளர்குல்சும் பீபிஷ்யாம் சரண் நெகி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x