Published : 05 Oct 2017 08:58 AM
Last Updated : 05 Oct 2017 08:58 AM

முடங்கிய தமிழகம்!- 7: தடுமாறும் சட்டம் ஒழுங்கு!

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் காவல் துறையினரின் அத்துமீறல்கள் அதிகரித்திருக்கின்றன என்றும் பாதுகாப்பு என்பதைத் தாண்டி மற்ற விவகாரங்களில் காவல் துறையின் சக்தி வீணடிக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்ட இடத்துக்குப் பாதுகாப்பு வழங்கியது தொடங்கி சட்ட மன்றத்தில் நுழைந்து உறுப்பினர்களை அகற்றிய சம்பவம் வரை பல நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றன.

காவல் துறை அதிகாரிகளில் வெளிப்படையான அரசியல் சார்பு நிலைகளோடு செயல்படுகிறவர்கள் உண்டு. அதனால் அதிகாரிகளுக்கு இடையிலான கோஷ்டிப் பூசல்கள் அதிகரித்திருக்கின்றன. நடுநிலைமையோடு செயல்படும் அதிகாரிகளும் பணியிட மாற்றம் என்ற பெயரில் வேண்டுமென்றே தூக்கி அடிக்கப்படுவதும் அதிகரித்துள்ளது.செல்போன் பறிப்பு, செயின் பறிப்பில் ஈடுபடுவது பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களே. அவர்களைச் சீர்திருத்துவதற்கான எந்தத் திட்டமும் இங்கில்லை. முன்பு காவல் துறையில் ‘காவல் நண்பர்கள் அமைப்பு’ ஏற்படுத்தி சிறார்கள் குற்றச்செயல்கள் பக்கம் செல்லாமல் தயார்படுத்தினர். நல்ல மாற்றம் ஏற்பட்டது. காவல் துறைக்கும் குற்றவாளிகள் குறித்த தகவல்களும் கிடைத்தன. அந்த முறையையே தற்போது கைவிட்டுவிட்டார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் காவல் துறை சார்பில் சென்னை முழுதும் போக்குவரத்துக் கண்காணிப்புக் கேமராக்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டன. ஆனால், அவற்றைச் சரிவரப் பராமரிக்காததால் அவற்றின் நிலை கேள்விக்குறியே. இதே நிலைதான் மற்ற மாவட்டங்களிலும். சென்னையில் கடந்த ஒன்பது மாதங்களில் சுமார் 500 சங்கிலிப் பறிப்பு, செல்பேசிப் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் 810 குழந்தைக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் 136 பேர். மற்ற அனைவரும் குழந்தைகள். கடந்த நான்கு ஆண்டுகளில் 2,982 பேர் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இதில் 1,700 பேர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் கொலை செய்யப்படுவதில் இந்தியாவில் தமிழகம் மூன்றாவது இடத்திலிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தில் 90 குழந்தைகள் கொலை செய்யப்படுகின்றனர். குற்றவாளிகளைப் பிடிப்பதில் காட்டும் வேகம், அவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் இல்லை என்கிறார்கள் வழக்கறிஞர்கள். 90 % குற்றவாளிகள் இறுதியில் தப்பிவிடுகின்றனர் அல்லது குறைந்தளவு தண்டனையையே பெறுகின்றனர் என்கின்றன குற்ற ஆவணக் காப்பக விவரங்கள். ஹாசினி விவகாரம் இதற்கு உதாரணம்.

மறுபுறம் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டவர்களும்கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறை அவர்களின்மீது தாக்குதலும் நடத்தியிருக்கிறது. காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டும் கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டிக்கும் வகையிலும் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற எழுத்தாளர்களையும் கலைஞர்களையும்கூட காவல் துறையினர் கைது செய்திருக்கிறார்கள். இப்படி அரசுக்கு எதிராக எந்தவொரு குரலும் எழுந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது காவல் துறை.

திருப்பூர் மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை பாண்டிராஜ் என்ற டிஎஸ்பி பலர் முன்னால் கடுமையாக தாக்கினார். தேசிய மனித உரிமை ஆணைய விசாரணையில் இருக்கும் அந்த அதிகாரிக்கு சில மாதங்களில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இந்த ஆட்சி காவல் துறை நிர்வாகத்தை எப்படி கையாள்கிறது என்பதற்கு அது ஒரு எளிமையான உதாரணம். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது சாலையோர கடைகளை, ஆட்டோவை எரிப்பது, இருசக்கர வாகனங்களை உடைப்பது என போலீஸார் நடந்துக்கொண்ட விதம் தேசிய அளவில் தமிழகக் காவல் துறையினர் மீது தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறை உயரதிகாரிகளே குட்கா தயாரிப்பாளர்களிடமிருந்து மாதந்தோறும் மாமூல் வாங்கினார்கள் என்று ஆதாரங்களுடன் எழுந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதில் இல்லை. டிஜிபி தேர்வு செய்யப்பட்டதிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது 20 சிறார்களுக்கு அலகு குத்தியதை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததற்கும், திருவள்ளூரில் பின்பற்றப்படும் மாத்தம்மா என்ற பெண்ணடிமைத்தனத்துக்கும் இதுவரை மூன்று விளக்கம் கேட்பு நோட்டீஸ்களை தேசிய மனித உரிமை ஆணையம் தமிழகக் காவல் துறைக்கு அனுப்பியுள்ளது. இதற்கு மட்டுமல்ல... மேற்கண்ட குற்றச்சாட்டுக்களில் ஒன்றுக்குக்கூட காவல்துறையிடம் பதில் இல்லை!

காவல் துறையினர் தரப்பிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. 2016 ஜனவரியில் தேசிய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 180.59 போலீசார் இருப்பதாகக் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவிக்கிறது. ஆனால் தமிழகத்தில் காவலர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை காவலர் தேர்வுகள் நடந்துவந்தன. தற்போது தேர்வுகளை உரிய காலத்தில் நடத்தி முடிப்பதில்லை. இதனால் சென்னையில் மட்டுமே 2,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காவலர்கள் 12 - 16 மணி நேரம்வரை பணியாற்றுகின்றனர். ஓய்வில்லாத பணிகளின் காரணமாக ஏற்படும் மனஅழுத்தம், நெருக்கடி காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை 85 போலீஸார் உயிரிழந்துள்ளனர். தற்கொலை, மாரடைப்பால் 35 போலீஸார் உயிரிழந்துள்ளனர். பணி முடிந்து செல்லும்போது விபத்து, பணியின்போது விபத்து என 29 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்தப் பிரச்சினைகளை அரசுதான் சரிசெய்ய வேண்டும். இந்தக் காரணிகள் எல்லாம் கடைசியில் பொதுமக்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை இந்த அரசு கண்டுகொள்வதேயில்லை!

- மு.அப்துல் முத்தலீஃப்,

தொடர்புக்கு: abdulmuthaleef.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x