Last Updated : 12 Oct, 2017 10:37 AM

 

Published : 12 Oct 2017 10:37 AM
Last Updated : 12 Oct 2017 10:37 AM

பணமதிப்பு நீக்கம் ஒரு மீள் பார்வை!- 4: சிறுதொழில்களை முடக்கிப்போட்ட மோடி அரசு!

பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரியும் சிறுதொழில் துறையில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை நேரடியாக உணர்ந்தவன் நான். அந்த வகையில் இவற்றின் தாக்கங்களைப் பதிவுசெய்வது மிக அவசியமானது என்று கருதுகிறேன். மும்பையிலிருந்து இயங்கும் அகில இந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் எனும் முறையிலும் சிறுதொழில் முனைவாளன் எனும் முறையிலும் இதைப் பதிவுசெய்கிறேன்.

கண்டுகொள்ளாத அரசு

பணமதிப்பு நீக்கம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் நல்லது என்று அரசு முன்வைத்த வாதத்தை நாங்கள் மறுக்கவில்லை. கறுப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிக்க ஒரு அரசு எடுக்கும் நடவடிக்கை எனும் வகையில் அதை வரவேற்கலாம்தான். ஆனால், அது செயல்படுத்தப்பட்ட விதம் மிக மோசமானது என்பதையும் அதன் மூலம் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் நாங்கள் தொடக்கத்திலிருந்தே முன்வைத்தோம். குறிப்பாக, கடந்த டிசம்பரில் அகில இந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக ஒரு கமிட்டியை அமைத்து, பணமதிப்பு நீக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டோம்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பாதிப்புகள் தொடர்பாக இந்திய அளவில் வெளிவந்த முதல் அறிக்கை அதுதான். பணமதிப்பு நீக்கத்தால் 35% வேலையிழப்பும், கிட்டத்தட்ட 50% வருமான இழப்பும் ஏற்பட்டிருக்கிறது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டினோம். சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கடும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன என்றும் சேவைத் துறையும் ரியல் எஸ்டேட் துறையும் சரிவைச் சந்தித்திருக்கின்றன என்றும் அதில் குறிப்பிட்டோம். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்பதை அரசுக்குத் தெரியப்படுத்தினோம். ஆனால், மத்திய அரசு இவற்றையெல்லாம் பொருட்படுத்த வேயில்லை.

மார்ச் மாதம் வாராக்கடன் அதிகரித்தது தொடர்பான புள்ளிவிவரங்கள் வந்த பின்னர்தான் பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்பு தெரியவந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்த பின்னர், பெரிய நிறுவனங்களின் ‘பேலன்ஸ் ஷீட்’ வந்த பின்னர், பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கின. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஒவ்வொரு நிறுவனமும் அழிவை நோக்கியோ அல்லது மூடுவிழாவை நோக்கியோ சென்றுகொண்டிருந்தது.

ஆனால், அரசு இந்தச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. வாராக்கடன் கடுமையாக அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் சிறுதொழில் நிறுவனங்கள், வங்கிக் கடனைத் திருப்பித்தர முடியாததுதான். வாராக்கடன் மறுகட்டமைப்புத் திட்டத்தைக் கொண்டுவருவதாக ரிசர்வ் வங்கி சொன்னது. ஆனால், வங்கிகளுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதே தவிர, வாராக்கடன்களுக்கான நிபந்தனைகள் தளர்த்தப்படுவதற்கான அறிவிப்புகள் வரவேயில்லை.

சிறுதொழில் என்பது நாட்டுக்கு மிக முக்கியமானது என்பதால், அது நலிவடைந்துவிடக் கூடாது என்று அரசிடம் மன்றாடினோம். வாராக்கடன் விஷயத்தில் சிறுதொழில் துறையிடம் கருணையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றோம். பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக, கடன் திரும்பச் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அரசு கேட்கவேயில்லை. சிறுதொழில்களுக்கு அடமானமில்லாக் கடன் ரூ. 1 கோடியிலிருந்து ரூ.2 கோடிக்கு அதிகரிப்பதாக டிசம்பர் 31-ல் பிரதமர் நரேந்திர மோடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில், ஏற்கெனவே ரூ.1 கோடிக்கான கடனுக்கே சொத்தை வாங்கிக்கொண்டுதான் கடன் கொடுக்கப்படுகிறது. அதில் மேலும் ஒரு கோடியை உயர்த்துவதால் பலன் என்ன?

பணமதிப்பு நீக்கத்தின் விளைவாக நாட்டில் 24% சிறுதொழில்கள் அழிந்துவிட்டன. கடும் பாதிப்பிலிருந்து வெளிவரத் திணறிக்கொண்டிருந்த சமயத்தில், ஜூன் 15 அன்று ஒரு அறிவிப்பு வெளிவந்தது - ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்படும் என்று! எங்களுக்கு அது பேரதிர்ச்சியாக இருந்தது. எந்தவித முன்தயாரிப்பு இல்லாமல் சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டுவருவது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொன்னோம். அத்துடன் ஜிஎஸ்டி சட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்று பட்டயக் கணக்காளர்கள் மூலம் ஒரு அறிக்கையைத் தயாரித்து அளித்தோம். அரசிடம் எந்தச் சலனமும் இல்லை.

சாதனையா இது?

தீப்பெட்டித் தொழிற்சாலைகளாகட்டும், ஜவுளித் துறையாக இருக்கட்டும், விவசாயிகளாக இருக்கட்டும் - யார் எந்தக் கருத்து சொன்னாலும் அதைக் கேட்கவே மாட்டோம் என்றே இந்த அரசு செயல்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எவ்வளவு பெரிய வேலைநிறுத்தம் செய்தாலும் திரும்பிக்கூட பார்க்காத அரசு இது. எங்கள் மிகப் பெரிய வருத்தம் இதுதான். இன்றைக்கு ஜிஎஸ்டியால் என்ன நடந்திருக்கிறது? இணையத்தின் மூலம் ஒரேசமயத்தில் ஏராளமானோர் கணக்கு தாக்கல் செய்ய வேண்டியிருந்ததால் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகள் முதல் பல்வேறு பிரச்சினைகளை முதல் மாதத்திலேயே எதிர்கொள்ள நேர்ந்தது.

என்ன செய்வது என்று ஒருவித பதற்றத்திலேயே இருக்க வேண்டியிருந்தது. ஆனால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெரிய சாதனையை நிகழ்த்திவிட்டதுபோல் பேசிக்கொண்டிருந்தார். “ரூ.90,000 கோடி வசூலாகும் என்று நினைத்தோம். ஆனால், ரூ.92,000 கோடி வசூலாகிவிட்டது” என்று துணிந்து அடித்துவிட்டார். ஆனால், ‘வசூலானதாகச் சொல்லப்பட்ட தொகையில் ரூ.42,000 கோடியை அரசு திருப்பித் தர வேண்டும். ரூ.92,000 கோடியில் உள்ளீட்டு வரி வரவும் சேர்க்கப்பட்டுவிட்டது’ என்று மறுநாளே எல்லோரும் நிபுணர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதாவது 15%-ஆக இருந்த சேவை வரி, 18%-ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதால்தான் அப்படி அதிகரித்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்கள்.

ஆகஸ்ட் மாதம் மேலும் பிரச்சினைகள். எல்லோரும் பரிதவித்து நின்ற நிலையில், காலக்கெடுவை நீட்டிப்பதாகச் சொன்னார் நிதியமைச்சர். இரண்டு மாதங்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்த பிறகு, காலநீட்டிப்புச் செய்வதால் என்ன பிரயோஜனம்? இதை ஏன் முன்பே செய்யவில்லை? இரண்டு மாதங்கள் கழித்துதான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கும் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? அதிலும் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சில பொருட்களுக்கு வரி குறைக்கப்படுவதாக அறிவிப்பதில் யாருக்கு லாபம்? அதுவரை சிறுதொழில் முனைவோர் எப்படிச் சந்தையின் சவால்களை எதிர்கொண்டிருக்க முடியும் என்பதையெல்லாம் அரசு கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

தொழிலில் கவனம் செலுத்த வேண்டிய சிறுதொழில் முனைவோர் ஆடிட்டர் பின்னால் அலைந்துகொண்டிருந்தால் அவர்களால் எப்படி பிழைப்பு நடத்த முடியும்? ஒரு பக்கம் அவர்களுக்குக் கடன் கொடுப்பதைக் குறைத்தாகிவிட்டது; மறுபக்கம் அவர்களது வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது இன்னொரு வேதனை.

நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது பெரு நிறுவனங்களுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. சிறுதொழில் முனைவோர் யாருமே அழைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பில் யாருமே அழைக்கப்படவில்லை. எங்களை எந்தக் கூட்டத்துக்கும் அழைப்பதில்லை என்பது மட்டுமல்ல; நாங்கள் முன்வைக்கும் பிரச்சினைகளைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்றால் அதை என்னவென்று சொல்வது?

இனி மறைக்க முடியாது

சம்பாதிப்பதில் 30%, 40% அரசுக்குத் தர வேண்டும் என்றால் எப்படி ஒருவர் பிழைப்பு நடத்த முடியும் என்று தெரியவில்லை. அரசின் நடவடிக்கைகளால் சிறுதொழில்கள் சந்தித்த பிரச்சினைகளை விளக்க ஒரு உதாரணம் தருகிறேன். ஒரு தொழிலதிபர் ரூ.100-க்கு ஒரு ஆர்டர் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் அவருக்கு ரூ.5 கிடைக்கும்; ரூ.95-க்கு மூலப் பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது; ஆர்டர் எடுத்தவர் 30% முன்தொகை தருகிறார்; பாக்கி ரூ.65-க்கு அந்தத் தொழிலதிபர் கடன் வாங்க வேண்டியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். இந்தச் சூழலில் முன்தொகையாக வாங்கிய 30% தொகைக்கும் இந்த மாதமே ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று சொன்னால் அவர் நிலைமை என்னாகும்? இதுதான் நடக்கிறது.

இன்னொரு விஷயம். ஜிஎஸ்டி கொண்டுவந்தால் பாதிப்புகள் ஏற்படும் என்று ஜவுளித் துறையினர், தீப்பெட்டித் தொழிலைச் சேர்ந்தவர்கள், சிறுதொழில் வர்த்தக சங்கங்கள், வணிகர்கள், விவசாயிகள் என்று பல தரப்பினர் வேலை நிறுத்தம் செய்தார்கள். யாரையும் அழைத்து ‘உங்கள் பிரச்சினைகளைச் சொல்லுங்கள்’ என்று அரசு கேட்கவேயில்லை.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையாகட்டும், ஜிஎஸ்டியாகட்டும் – அவற்றின் நோக்கங்களை நாங்கள் குறை சொல்லவில்லை. அவசரகதியில், கடும் கெடுபிடிகளுடன் அவை செயல்படுத்தப்பட்ட விதத்தைத்தான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. அரசிடம் ஒரு சர்வாதிகார தொனிதான் தெரிகிறது. இந்தப் போக்கு நாட்டின் அழிவுப் பாதைக்குத்தான் இட்டுச் செல்லும். மோடி அரசு கொண்டுவந்த ‘ஸ்டார்ட்-அப் இந்தியா’, ‘ஸ்கில் இந்தியா’ என்று எந்தத் திட்டமும் வெற்றி பெறவில்லை. ஏற்றுமதி கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. ஜிடிபி குறைந்துவிட்டது. பணவீக்கம் அதிகரித்துவிட்டது. வெளிவந்துகொண்டிருக்கும் புள்ளிவிவரங்கள் அனைத்தையும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டன. இதற்கு மேலும் மத்திய அரசு எதையும் மறைக்க முடியாது!

உள்ளிருந்து எழும் குரல்: யார் துரோகி?


பணமதிப்பு நீக்க நடவடிக்கை செயல்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே லட்சக்கணக்கானோர் வேலையிழந்ததாகச் செய்திகள் வந்தன. கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் வேலையிழந்திருக்கிறார்கள். அப்படியென்றால், சுமார் 60 லட்சம் பேர் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். மக்களுக்குப் பெருந்துயர் அளித்த அந்த நடவடிக்கை அது. நாள் கணக்கில் வங்கிகள், ஏடிஎம்கள் முன்னால் நின்ற பலர் மரணமடைந்தார்கள்.

இவர்களின் இறப்புக்கு யார் பொறுப்பு? புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றால் பயங்கரவாத நடவடிக்கைகள் என்றார்கள். அது சாத்தியமென்றால், உலக நாடுகள் அனைத்தும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்து பயங்கரவாதத்தை வேரறுத்துவிடலாமே? உண்மையைச் சொல்வதால் எங்களைத் துரோகிகள் என்று சொல்வார்கள். வேலையிழந்து நிற்கும் மக்களிடம் போய்க் கேளுங்கள், யார் துரோகி என்று அவர்கள் சொல்வார்கள்!

-உத்தவ் தாக்கரே, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா கட்சியின் தலைவர்

 

பாதிக்கப்பட்டோர் குரல்

மோடியின் ஆதரவாளனாக இருந்த நான், பணமதிப்பு நீக்கம் நல்ல நடவடிக்கை என்றே நம்பினேன். கடைசியில் ஏமாந்துவிட்டேன். அப்போது ஊழியர்களின் கணக்குகளுக்கும் சம்பளத்தைப் போட்டுவிட்டோம். ஆனால், அதை எடுப்பதற்கு அவர்கள் பட்டபாடு இருக்கிறதே மறக்கவே முடியாது. பணம் எடுக்க வேண்டியிருந்ததால் தினமும் ஏழெட்டுப் பேரால் வேலைக்கு வர முடியவில்லை. அம்பத்தூர் தொழிற்பேட்டை, பாடி போன்ற இடங்களுக்கு வந்துபார்த்தால் தெரியும்!

பத்துக்குப் பத்து என்ற அளவுள்ள இடத்தில் ஒரு சிஎன்சி இயந்திரத்தைப் போட்டுக்கொண்டு எத்தனை பேர் தொழில் நடத்துகிறார்கள் என்பதை உணர்வீர்கள். அவர்கள் எல்லாம் இன்றுவரை எழுந்திருக்கவேயில்லை. பலரும் ஆயுத பூஜையைக் கொண்டாடவில்லை தெரியுமா? போதாக்குறைக்கு ஜிஎஸ்டி வேறு வந்து எங்களை இன்னும் கீழே தள்ளிவிட்டது. மோடி கொண்டுவரும் பல திட்டங்கள் சமூகத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களைத்தான் பாதிக்கின்றன என்பதை எனக்கு உணர வைத்ததற்காகவே நான் பணமதிப்பு நீக்கத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்!

- எஸ். பாலசுப்பிரமணியன், குறு தொழில் நிறுவன உரிமையாளர்,

 

-கே.இ.ரகுநாதன்,
அகில இந்திய உற்பத்தியாளர் சங்கத்தின் தேசியத் தலைவர்.
தொடர்புக்கு: president@aimoindia.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x