Published : 24 Oct 2017 09:45 AM
Last Updated : 24 Oct 2017 09:45 AM

இரண்டு உலகங்கள்; வேடிக்கை பார்க்கும் இந்தியா!

உலகின் ஆகப் பெரிய ஜனநாயகமாக, வளர்ந்து வரும் பொருளாதாரமாக, நம்பத் தகுந்த சமுதாயமாக, மிகவும் பாதுகாப்பான நாடாக, சுமார் 130 கோடி மக்களுடன் உயர்ந்து நிற்கிறது இந்தியா. நமது திட்டங்களும் செயல்பாடுகளும் இதற்கு இணையாக உள்ளனவா....?

ரோஹிங்கியா முஸ்லிம்கள், சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். உலகத் தலைவர்கள் - தலாய்லாமாவை சந்திக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது சீன அரசாங்கம். ‘காடலன்' தனியாட்சிக்குக் கதவுகளை இறுக மூடிவிட்டது பிரெஞ்சு அரசு. பாலஸ்தீன பிரச்சினையைக் காரணம் காட்டி ‘யுனெஸ்கோ'வை விட்டு வெளியேறிவிட்டது அமெரிக்கா. எவர் பேச்சையும் கேட்க மறுத்து அணு ஆயுத விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது வட கொரியா. சிரியா, சோமாலியா அகதிகள் பிரச்சினை முடிவில்லாமல் நீள்கிறது. நேரடியாகக் களத்தில் இறங்கி, குறிப்பிடத்தக்க முக்கிய பங்காற்ற வேண்டிய இந்தியா, எங்கேயோ முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டு இருக்கிறது. நம்முடைய கவனம் எல்லாம் உள்ளூர் சண்டைகளில் அமுங்கிக் கிடக்கிறது.

வெளியே ஒரு உலகம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில், குரல் எழுப்ப, உதவி செய்ய மறந்தால், சரித்திரம் நம்மை மன்னிக்காது. மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, கான் அப்துல் கபார் கான், டாக்டர் ராதாகிருஷ்ணன், இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், வாஜ்பாய், டாக்டர் அப்துல் கலாம்.... என உலகப் பார்வை கொண்டிருந்த இந்தியத் தலைவர்கள் ஏராளம்.

அணிசேராக் கொள்கையை வடிவமைத்து உலக அமைதிக்கு வழி கோலினார் நேரு. மொழிவாரி நாடாக வங்கதேசம் உருவாகக் காரணமாக இருந்தார் இந்திரா. பாகிஸ்தானின் மிக உயரிய 'சிவிலியன்' விருது (நிஷான்-இ-பாகிஸ்தான்) பெற்றார் மொரார்ஜி. லாகூருக்கு பேருந்துவிட்டு, ‘பஸ் டிப்ளமசி' உருவாக்கினார் வாஜ்பாய்.

இன்று என்ன நிலைமை....? தஞ்சம் கேட்டு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். 'இது தவறு' என்று இடித்து உரைக்கக்கூட நாம் தயராக இல்லை.

தனது சொந்த நாட்டு இளைஞர்களையே ‘புல்டோசர்' ஏற்றிக் கொன்ற சீன அரசு, சர்வ சாதாரணமாக மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. அப்பட்டமாக ஆக்கிரமிப்பு வேலையில் ஈடுபட்டு வரும் சீனா, திபெத் விடுதலைக்காக அமைதியாகப் போராடும் தலாய் லாமாவை யாரும் சந்திக்கக் கூட உரிமை இல்லை என்கிறது. திபெத் விவகாரத்தில் இந்தியாவின் மவுனம் நமது தார்மீக நெறிமுறைகள் அனைத்துக்கும் எதிரானது.

ரோஹிங்கியா முஸ்லிம்களின் நிலை சொல்லில் வடிக்க முடியாதது. கொடூரமான தாக்குதலில் ஓர் இனமே அழிந்து விடுகிற ஆபத்தான சூழ்நிலை நிலவுவதாக ஐ.நா. மனித உரிமைக் கமிஷன் தலைவர் கூறுகிறார். அகதிகள் பிரச்சினை, கண்ணில் ரத்தம் வர வைக்கிறது. 2017-ம் ஆண்டில், சுமார் 6.5 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக அவதிப்பட்டு வருகின்றனர் என்கிறது ஐ.நா. சபை. சிரியா, சோமாலியாவில் கடும் பஞ்சம் காரணமாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கில் மாண்டு போகின்றனர்.

இன்னும் சில நாடுகளிலோ மக்கள், உயிர் வாழவும் உரிமை இல்லாமல், அடுத்த வேளை சோற்றுக்கு வழி தெரியாமல், நாட்டை விட்டு வெளியேறி தஞ்சம் கிடைக்காமல் அனாதைகளாய் திரிகின்றனர். ஆட்சி, திட்டம், முன்னேற்றம், ஊழல், யுத்தம் என்று எந்த நல்லது, கெட்டதும் அணுகாத, அறியாத ஒரு மிகப் பெரிய மனித சமுதாயம் உருவாகிக் கொண்டு இருக்கிறது.

ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா என்று எல்லாக் கண்டங்களிலும் மையம் கொண்டிருக்கும் இந்த கோரப் புயல், ஒரு புதிய உலகத்தை சிருஷ்டித்து இருக்கிறது. வரிசையில் நின்று பெற்றுக் கொள்கிற அரை தட்டு உணவு, கூட்டம் கூட்டமாக ஒண்டிக் கொள்ள ஒரு கூடாரம், அடி, உதைகளை வழங்க வரும் ‘அந்த நாட்டு' ராணுவம், வேண்டா வெறுப்பாய் ஏற்றுக் கொண்டு, கொடூரக் குற்றவாளிகளைப் போல நடத்தும் அரசுகள்.... இந்த அடையாளத்துடன் பல லட்சக்கணக்கான மக்கள் ‘இருக்கிற' அந்த உலகம், நாம் வாழும் உலகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

இக்கட்டான சூழலில், வெளிப்படையாக இவர்கள் பக்கம் நிற்க வேண்டியது நமது தார்மீகக் கடமை. உயிர்போகிற (உண்மையாகவே) பிரச்சினைகள் மண்டிக் கிடக்கின்றன. இவற்றில் நாம் காட்டுகிற ஆர்வம், தீவிரம் - உலக அரங்கில் புதிய அத்தியாயத்தை எழுதும். இதைத்தான் துன்பத்தில் உழலும் பல லட்சக்கணக்கானோர், இந்தியாவிடம் ஏக்கத்துடன் எதிர்பார்க்கின்றனர். மனிதம் வாழ நாம் தலைமை ஏற்றாக வேண்டும். கடல் அழைக்கிறது; இன்னும் ஏன் இந்த கிணற்றுச் சண்டை....?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x