Published : 20 Aug 2014 08:12 AM
Last Updated : 20 Aug 2014 08:12 AM

தெலங்கானாவில் ஒரு கோடி குடும்பங்களில் வீடு வீடாகக் கணக்கெடுப்பு: ஹைதராபாத் உட்பட மாநிலம் முழுவதும் இயல்பு நிலை ஸ்தம்பித்தது

தெலங்கானா அரசு சார்பில் சுமார் ஒரு கோடி குடும்பங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனால் மாநிலத் தலைநகர் ஹைதராபாத் உட்பட தெலங்கானா மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்தது.

மக்கள் நலத் திட்டங்கள் தகுதியான மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தெலங்கானா அரசு சார்பில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சுமார் ஒரு கோடி குடும்பங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் குடும்ப விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், அசையா சொத்துகள் போன்ற விவரங்கள் சேகரிக்கப் பட்டன.

இந்த கணக்கெடுப்பை நடத்தக் கூடாது எனக் கோரி மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் மக்கள் நலனுக்காக மட்டுமே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என தெலங்கானா அரசு விளக்கம் அளித்ததால் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எனினும் யாரையும் வற்புறுத்தாமல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் தெலங்கானா மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் கணக்கெடுப்பு தொடங்கியது. இதில் பஞ்சாயத்து ராஜ், வருவாய் துறை, நகராட்சி, மாநகராட்சி, அங்கன்வாடியைச் சேர்ந்த 3.76 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர்.

மாநில ஆளுநர் ஈ.வி.எஸ். நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

கணக்கெடுப்பை ஒட்டி தெலங்கானா முழுவதும் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் முந்தைய நாளே வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தெலங்கானாவை பூர்வீகமாக கொண்ட மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றனர்.

கணக்கெடுப்புக்காக மக்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை வீடுகளிலேயே இருந்ததால் தெலங்கானா முழுவதும் சாலைகள் வெறிச்சோடின. வணிக வளாகங்கள், வங்கிகள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டன. ஹோட்டல்கள், டீக்கடைகள், திரை அரங்குகளும் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி ஹைதராபாத் நகரம் வெறிச்சோடியது. குறைந்த அளவே அரசு, தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கின. இதனால் தெலங்கானா மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்தது.

இந்த கணக்கெடுப்புக்கு சில கிராமத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து அரசு ஊழியர்களை தங்கள் கிராமங்களுக்குள் அனுமதிக்கவில்லை. பல குடியிருப்புகள் ஒரே எண்ணில் இருந்ததால் கணக்கெடுப்பாளர்கள் அவதிப்பட்டனர்.

நடிகை விஜயசாந்தி, நடிகர் பவன் கல்யாண் ஆகியோர் தங்களது விவரங்களை அளிக்க மறுத்துவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x