Published : 29 Aug 2014 11:26 AM
Last Updated : 29 Aug 2014 11:26 AM

இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் நலிவடையும் ‘செங்காந்தள்’ சாகுபடி: 4 ஆண்டுகளில் ரூ.100 கோடி இழப்பு; விவசாயிகள் கண்ணீர்

இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் செங்காந்தள் சாகுபடி நலிவடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதி விவசாயிகள்.

திருப்பூர் மாவட்டம், மூலனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கைக்கு அடுத்தபடியாக உள்ளது செங்காந்தள் சாகுபடி. முதல்முறையாக 1980-ம் ஆண்டுகளில் மூலனூர் பகுதியில்தான் செங்காந்தள் சாகுபடி தொடங்கியது. இதைத்தொடர்ந்து சேலம், திண்டுக்கல், திருச்சி, நாகை என மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் சாகுபடி தொடங்கப்பட்டது. இவை கார்த்திகை கிழங்கு, கலப்பைக் கிழங்கு, குளோரி லில்லி, சூப்பர் லில்லி உள்பட பல்வேறு பெயர்களை கொண்டவை. அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்ட இந்தச் செடியின் பூக்களை, ‘கண்வலி’ என்றும் அழைப்பர்.

செங்காந்தள் செடியின் விதைகள், மூட்டுவலி, பக்கவாதம், சுவாசக் கோளாறுகள் உள்பட பல்வேறு நோய்களுக்கு மூல மருந்தாக இருந்ததால், ஆரம்ப காலத்தில் இதன் சாகுபடி தோட்டக்கலைத் துறை விவசாயிகளிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இதனால், முருங்கை சாகுபடியில் ஈடுபட்ட பலர், ‘கண்வலி’ மூலிகை சாகுபடியில் ஈடுபட்டு அதிக மகசூலை ஈட்டினர். சீதோஷ்ண நிலையால் மூலனூரில் மட்டும்தான் அதிக விளைச்சல் கிடைத்து வந்தது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் ‘கண்வலி’ மூலிகை சாகுபடி அழியும் அபாயத்துக்கு சென்று கொண்டிருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக மூலனூரைச் சேர்ந்த தமிழ்நாடு ‘கண்வலி’ மூலிகை விதை உற்பத்தியாளர் நலச் சங்க மாநில அமைப்பாளர் ப.லிங்கசாமி கூறியது:

மூலனூர் சுற்றுவட்டார கிராமங்களில் ‘கண்வலி’ சாகுபடி அமோகமாக உள்ளது. செடியில் பூத்து, காய்த்து அதன் மூலமாக கிடைக்கும் ஒரு கிலோ விதையை, 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1750-க்கு விற்று வந்தோம். தற்போது ரூ.900-க்கு விற்கிறோம். இரண்டு மாதங்கள் கழித்து சில விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ விதையை ரூ.1200-க்கு வியாபாரிகள் பெற்றனர். இதை சிலர் மறைமுகமாக தடுத்தனர். இதன் பின்னணியில் இருப்பவர்கள் இடைத்தரகர்கள்தான்.

இப் பிரச்சினையால், இந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.30 கோடியும், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.100 கோடி வரையும் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ‘கண்வலி’ விதைகளை வெளிப்படையாக விற்பனை செய்யவும், பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து விதைகளை வாங்கவும், கரும்பு, பருத்திபோல், கண்வலி விதைக்கும் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால், பவுடர் மற்றும் வேதியியல் பொருள்கள் உற்பத்தி நிறுவனங்களை அரசே துவக்கி, கண்வலி விதைகளை கொள்முதல் செய்ய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட விலை வீழ்ச்சியால், கிழங்குகள் பயிரிடப்படுவதும் குறைந்துவிட்டது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x