Last Updated : 15 Jun, 2014 12:00 AM

 

Published : 15 Jun 2014 12:00 AM
Last Updated : 15 Jun 2014 12:00 AM

கால்பந்தில் கலக்கும் திண்டுக்கல் ஆசிரியை

இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்கே பெரிதாக ஆதரவில்லாத நிலையில், பெண்கள் கால்பந்து ஆடுவதற்கு என்ன பெரிய ஆர்வம் இருக்க முடியும். ஆனால், திண்டுக்கல்லைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியையான ரூபாதேவி (25), தெற்காசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய பெருமையைப் பெற்றுள்ளார்.

பெரிய வசதிகள் இல்லாத குடும்பத்தில் பிறந்த ரூபா, ஆறாம் வகுப்பு முதலே கால்பந்து விளையாடத் தொடங்கிவிட்டார். "சின்ன வயசுல கிரவுண்ட வேடிக்கை பார்க்கப் போவேன், அப்போது பந்தை எட்டி உதைத்து உற்சாகமாக விளையாடிய மூத்த வீரர்களே எனக்கு உத்வேகம் தந்தார்கள். என்னுடைய குடும்பச் சூழலையும், ஆர்வத்தையும் கருத்தில் கொண்டு, கால்பந்தில் எனக்கு உத்வேகம் தந்தவர் பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ்தான்" என்கிறார் ரூபா. இவருடைய தாயும் தந்தையும் காலமாகிவிட்டதால் சகோதரி வீட்டில் வசித்து வருகிறார்.

ஆசிய நடுவர்

2007-ம் ஆண்டே ரெஃபரிக்கான 3-ம் பிரிவுத் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றாலும், அதைத் தொடர வேண்டும் என்ற ஆர்வம் மூன்று வருடங்கள் கழித்தே ரூபாவுக்கு வந்தது. அடுத்த நிலையான 2-ம் பிரிவுத் தேர்விலும் தேர்ச்சி பெற்றார். 2010-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பிசிகல் எஜுகேஷன் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, ஏற்காட்டில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, கால்பந்து நடுவராகும் வாய்ப்பு இவரை தேடி வந்தது.

முதலில் இலங்கையில் நடந்த தெற்கு, மத்திய ஆசிய 14 வயதுக்கு உட்பட்டோர் சிறுமிகளுக்கான கால்பந்து போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.

"ஆறு நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டித் தொடரில் முதல் போட்டிக்கே நடுவர் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமைதான்" என்கிறார். அந்தப் போட்டித் தொடரில்

தன் திறமையை நிரூபிக்க அவர் போராடியதன் காரணமாக, அடுத்துத் தோஹாவில் நடந்த பெஸ்ட் அண்டர் 14 போட்டியிலும் நடுவர் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

சவாலான பணி

"நடுவர் பணி அவ்வளவு எளிதானதல்ல. ஏனென்றால் கால்பந்தில் வீராங்கனைகள் ஓடுவதைவிட, மிக அதிகமாக நடுவர்கள் ஓடியாக வேண்டும். அதனால் ஒவ்வொரு போட்டித் தொடருக்கு முன்னாலும் உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அத்துடன் களத்தில் நடுவர் செய்யும் சிறு தவறும் வீராங்கனைகளைச் சோர்வடையச் செய்துவிடும். இதனால் விளையாடும்போது உளவியல் நெருக்கடி அதிகரித்துவிடும்" என்கிறார் ரூபாதேவி.

மதிப்புமிக்க ‘பியூச்சர் ரெஃப்ரி' திட்டத்துக்காகத் தமிழகத்தில் இருந்து கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் ரூபாதேவி. இதன்கீழ் ஆசியக் கால்பந்து சம்மேளனம் அவருக்குப் பயிற்சியளித்தது.

மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசியக் கால்பந்து சம்மேளனத்தில் உறுப்பினரானால் மட்டுமே உலகக் கோப்பை போட்டிகளில் நடுவராகப் பணியாற்ற முடியும். அதற்கு அந்தச் சம்மேளனத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்.

ஒலிம்பிக் கனவு

"ஒரு வீராங்கனையாக விளையாடும்போது, நாட்டுக்காக விளையாடுகிறோம் என்ற பெருமை இருக்கும். அதேநேரம், நடுவராகிவிட்டால் தொழில்முறையில் பெரிய மதிப்பிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. உலகக் கோப்பை போட்டிகளிலும், ஒலிம்பிக்கிலும் நடுவராகப் பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்" என்கிறார்

கால்பந்தில் பல பெண்களுக்கு ஆர்வம் இருந்தாலும், இடையில் ஏற்படும் சில ஏமாற்றங்களால் அதைவிட்டு விலகிவிடுகிறார்கள். அது போன்ற விஷயங்கள் களையப்பட்டு, உணவு, படிப்பு, நிரந்தர வேலை ஆகியவற்றுடன் உத்வேகமும் அளித்தால், உலகக் கால்பந்து களத்தில் தமிழகப் பெண்கள் சாதிக்கும் நாள் வரும் என்பதற்கு ரூபாதேவி நல்ல எடுத்துக்காட்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x