

‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்ட ‘சபாஷ் சாணக்கியா' இரண்டாம் பாகம் நூலின், ஆங்கில மொழியாக்க நூல் இப்போது வெளிவந்துள்ளது. உலகில் தோன்றிய அதிபுத்திசாலிகளில் ஒருவர் சாணக்கியர். கி.மு. நான்காம் நூற்றாண்டில் இவர் எழுதிய 'சாணக்கிய நீதி' பல நடைமுறை அறிவுரைகளைக் கொண்டது. மனித மனங்களை ஊடுருவிப் பார்க்கும் சாணக்கியரின் திறமைகளைப் பறை சாற்றுவது.
அந்நூலில் இருந்து 51 பொன்மொழிகளை எடுத்து, இன்றைய நமது வாழ்க்கையைச் சுற்றிலும் நடைபெறும் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி இந்நூல் விளக்குகிறது. தமிழ் நூலின் ஆசிரியரான சோம வீரப்பன், ஆங்கிலத்திலும் நூலை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
சாணக்கியரின் அறிவுரைகளை விளக்குவதற்கு பல மேல்நாட்டு அறிஞர்களின் பொன்மொழிகளையும், செயற்கை நுண்ணறிவு, கைபேசி செயலிகள் என இன்றைய நவீனத்தையும், சந்தைப்படுத்துதல், மனிதவள மேலாண்மை போன்றவற்றிலிருந்து எடுத்துக்காட்டுகளையும் நூலாசிரியர் கையாண்டுள்ளார். பல சினிமா கதைகளையும் கூட சுட்டிக்காட்டி இருக்கிறார்.
நூலாசிரியர் வாசகருடன் நேரில் உரையாடுவது போன்று, மிகவும் ஆர்வமுடன் வாசிக்கத் தூண்டும் நடையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் இறையன்பு அணிந்துரை எழுதியுள்ள இந்நூலுக்கு, அமெரிக்கா, சீனா, பிரான்சு, துருக்கி நாடுகளைச் சேர்ந்த அறிஞர்களிடம் இருந்தும் வரவேற்பு கிடைத்துள்ளது. இது இந்நூலுக்குரிய உலகளாவிய ஏற்புடைத் தன்மையைக் காட்டுகிறது எனலாம்.