

ஒவ்வொரு மனிதரின் உயிரோடும் உணர்வோடும் பிறந்த ஊரின் பெருமையும் என்றும் கலந்தேயிருக்கிறது என்பர். தமிழாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என்றறியப்பட்ட உதயை மு.வீரையன், தான் பிறந்த ஊரின் சிறப்புகளையும் மனசுக்குள் ஊறி நொதிக்கும் மலரும் நினைவுகளையும் அப்படியே 44 தலைப்புகளின்கீழ் சுருக்கமாகவும் சுவையாகவும் கோத்துத் தந்துள்ளார்.
நான் ஏன் எழுதுகிறேன்? அரசியல், சமூக பொருளாதார நிலை, நாடகக் கலையில் நாட்டம், கள்ளுக்கடைகளும் காவல் துறையும், பெருமழைப் புலவர், போராட்டமும் முடிவும், சொல்ல மறந்த சில செய்திகள் என்கிற தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் வெறும் நினைவுக்குறிப்புகளாக மட்டும் சுருங்கிவிடாமல், அரை நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த தமிழக கிராமமொன்றின் சமூக எதார்த்த நிலையைக் குறுக்குவெட்டுக் கோணத்தில் ஈரம் சுமந்த நினைவுகளாகப் பகிர்கின்றன.