

பல விளைபொருள்களுக்குப் பின்னணியில் இருக்கும் பேருழைப்பு பொதுச்சமூகத்தால் உணரப்படாத வாடிக்கைக்கு உப்பும் விதிவிலக்கு அல்ல. உப்பளத் தொழிலாளர்களின் போராட்டம் மிகுந்த வாழ்க்கையை நெய்தலைக் கடந்து, மற்ற நிலத்து மக்களுக்கும் கொண்டு செல்ல விழைகிறது, ‘உப்பளத்தான்’.
உப்பளத் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஒருவரால் எழுதப்பட்டுள்ளது இந்தப் புதினத்துக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.
மிகை உணர்ச்சியை நாடாத, தனது குரலைத் தணித்துக்கொண்டு கதைமாந்தர்களை மட்டும் உரக்கப் பேச வைக்கிற, வேதனைகளுக்கு இடையே மலர்ச்சிகளுக்கும் குறையில்லாத வாழ்க்கையின் இயல்பை மறைக்காத கதைகூறல் வாசகர்களைப் புதினத்தோடு எளிதில் ஒன்றச் செய்து விடுகிறது.