

விவசாயக் குடும்பங்களில் அன்றிருந்தவை எதுவுமே இன்றில்லை என்ற நினைவேக்கம் பேராசிரியர் அரங்க மல்லிகாவின் பெரும்பாலான கவிதைகளில் வெளிப்படுகின்றன.
ஒரு கவிதையில், கிராமியப் புழங்குபொருள்களை நிரலாக வரிசைப்படுத்தியுள்ளார். ‘குற்றுயிரும் குலைஉயிருமாய் நினைவுகள்’ என்றொரு கவிதை.
நிலத்தை உழுவதற்கான முக்கிய கருவியான கொழுவைப் பற்றி, ‘படைசால்/ விளாக்கோலி/ உழுத கலப்பை மரித்து/ நாற்றங்காலின் ஒருமூலையில் கிடக்கிறது கொழு...!’ என்கிறார். மண்வெட்டியைப் பற்றிக் கூறுகையில், ‘அண்டைவெட்டி/ சாத்தணைப்போடவும்/ ஆளற்றுக் கிடக்கிறது/ காளைமார்க் கொட்டு/ மண்வெட்டி...!’ என்கிறார்.
அதுபோல அலவாங்கு பற்றிச் சொல்லும்போது, ‘சாற்றிக்கிடக்கிறது/ பின்புற/ வீட்டுக்கூரைச் சுவற்றில்/ ஆடுகள் பசித்து/ அரவம் காட்டும்போதெல்லாம்/ நீண்டு தழைக்கொய்து/ அப்பாவின் தோள்சுமந்த/ அலவாங்கு...!’என்கிறார்.
அதுபோல நுகத்தடி, தொறட்டி, அரிவாள் ஆகியன பற்றியும் பேசிச்செல்கிறார். அதில், கோணி ஊசியைப் பற்றிச் சொல்லும்போது, ‘எங்கு தொலைந்ததோ/ தெரியவில்லை/ பொன்னாய்க் குவித்த/ நெல்லை/ சாக்கில் பிடித்து/ சணல் கோர்த்துத் தைத்த/ கோணி ஊசி...!’ என்கிறார்.