

மலையாள எழுத்தாளரும் விமர்சகருமான சுகுமார் அழிக்கோடு நூற்றாண்டை முன்னிட்டு வழங்கப்படும் தேசிய விருதுக்கு சமூக செயல்பாட்டாளர் மேதா பட்கர், எழுத்தாளர் பெருமாள்முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமூகப் பிரச்சினைகள், இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள் முதலியவற்றுக்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்துச் செயல்பட்டதற்காக மேதா பட்கருக்கும், இந்திய இலக்கியத்தில் ஏற்படுத்தி இருக்கும் ஆழமான தாக்கம், சிக்கலான சமூக விஷயங்களைத் துணிவுடன் ஆய்வு செய்யும் படைப்புகள் ஆகியவற்றுக்காகப் பெருமாள்முருகனுக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது.
விருதுக்குரியவர்களை நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையிலான குழு தேர்வு செய்தது. வரும் 12ஆம் தேதி கண்ணூரில் நடைபெறும் அழிக்கோடு பிறப்பு நூற்றாண்டு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் விருதாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும் என்று சுகுமார் அழிக்கோடு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.