

தொடக்கத்திலேயே ‘செந்தூரப் பூவே...’ எனச் சோகமாக ஒலிக்கும் பாடல். கிராமத்தின் வெவ்வேறு நிலப் பகுதிகள் அடுத்தடுத்து காட்டப்படுகின்றன. நான்கு வரிகளில் அந்தப் பாடல் முடியும்போது ரயில் பாதையோரம் கதாநாயகி தவிப்புடன் காத்துக்கொண்டிருக்கிறாள். ரயில் வருகிறது.
அவள் எதிர்பார்த்தபடி எவரும் அங்கு இறங்கவில்லை. கண்களில் நீர் தளும்ப அவள் வெறித்துப் பார்க்கிறாள். அவள் கண்கள் மட்டும் தெரியும் திரையில் பின்னணி குரல் அவளது கடந்த காலத்துக்குள் அழைத்துச் செல்கிறது.
சோற்றுக் கலயத்துடன் கதாநாயகி மகிழ்ச்சி பொங்க வயல்வெளிகளில், ஆற்றங்கரை மேடுகளில் ஓடிக்கொண்டிருக்கிறாள். ‘சோளம் வெதைக்கயிலே...’ என்ற பாடல் ஒலிக்க, கிராம மனிதர்களின் அன்றாடக் காட்சிகள் விரிகின்றன. முதன்மை நடிகர்கள் தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் வழி அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.