

இசையைப் போன்றே எங்கும் பரவிப்படர்ந்து காற்றிலும் தவழ்ந்து மனித மனங்களை நிறைக்கும் வல்லமை பெற்றிருப்பது கதை. “கவிதைக்கு நெருக்கமாக, புதிர்வழியின் வாசலாக, ஜென் தியானமாக, ஒரு கைக் கடலாக, பலூனில் சிறைப்பட்ட காற்றாக, இரு கரங்களின் கூட்டுக்குள் ஒளிரும் சுடராக, வரலாற்றின் நினைவாக, வாழ்வின் முரணை உணர்த்தும் எறும்பின் கடியாக குறுங்கதைகள் இருக்கலாம்” என்கிறார் உதயசங்கர்.
இந்த எல்லாவித அனுபவத் தெறிப்புகளையும், இவற்றுக்கு அப்பால், வாசிக்கும் வாசகரின் மனோலயங்களுக்கு இசைய இன்னும் பல அனுபவங்களைத் தரும் சாத்தியங்களும் அவரின் ‘என்றுமுள இசை’ தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ஆலாபனையில் எழுந்து காற்றில் எங்கும் பரவிக் காதுகளையும், கேட்போரின் மனங்களையும் நிறைக்கும் இசையை ஒரு கோட்டுச் சித்திரமாகத் தந்திருக்கிறார் டாக்டர் உ. நவீனா. அது நூலின் அட்டைப் படமாக இடம் பெற்றிருக்கிறது.