

மனித மனங்களின் ஆழமான அக உணர்வுகளுக்கும், எந்திரத்தனமான அன்றாடப் புற வாழ்வுக்கும் இடையே நிகழும் முரண்களைத் தன் எளிய கதை மாந்தர்களின் வழியே அடையாளம் காட்டி வருபவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
மொத்தம் 16 கதைகள் நிறைந்த இவருடைய ‘சாய்ந்தாடும் குதிரை’ சிறுகதைத் தொகுப்பு, தன் அசாத்தியமான வாழ்வியல் சித்தரிப்புகளால் வாசக நெஞ்சில் தீராத உணர்வெழுச்சியை ஏற்படுத்தி, நெருக்கமாகத் தன்னை இணைத்துக் கொள்கிறது.
தொகுப்பின் முதல் கதையான ‘ஆப்பிளுடன் ஒரு நடனம்’ நவீன மனிதனின் எந்திரத்தனமான வாழ்வைப் பேசுகிறது. கைநிறைய ஊதியத்துடன் உயர்ந்த பொறுப்பில் இருந்தும், கார்ப்பரேட் வாழ்க்கையால் சலிப்பின் உச்சத்துக்கே செல்கிறார் விஜயராகவன்.
தனது அலைபேசித் திரையில் தோன்றும் துனிசிய இளம்பெண்ணின் ஆப்பிள் நடனம், அவருக்குள் தூங்கிக் கிடந்த பால்ய காலச் சுதந்திரத்தைத் தட்டியெழுப்புகிறது. அவளைப் போலவே தானும் ஆட வேண்டும் என்ற ஏக்கத்தில் அவர் ரகசியமாக முயன்றாலும், அவரது குடும்பமே ஒரு ‘சமூகக் கண்காணிப்பு அமைப்பாக’ மாறி அவரது கனவைச் சிதைக்கிறது.