

காலந்தோறும் பல்வேறு தடைகளையும் ஒடுக்குமுறைகளையும் புறக்கணிப்புகளையும் தாண்டிப் பெண்களின் கரங்கள் எழுதியபடிதான் இருக்கின்றன. ஆனால், வரலாற்றின் சுவடுகளில் அவை அனைத்தும் பதிவுசெய்யப்படுவதே இல்லை.
விதிவிலக்குகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலர் கொண்டாடப்பட்டு இருக்கின்றனரே தவிர எழுதவரும் பெரும்பாலான பெண்களின் பெயர்கள் இருட்டடிக்கப்படுவதுதான் வரலாறாக இருக்கிறது. இந்தச் சிறுமையைப் பொறுக்க முடியாமல், பெண்ணெழுத்துகளைப் பதிவுசெய்ய வந்தவர்களில் தாயம்மாள் அறவாணன் சமகால முன்னோடி.
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக இவர் பணியாற்றியபோது எழுதத் தொடங்கித் தற்போது வரை பெண்கள் சார்ந்து 23 நூல்களை தாயம்மாள் எழுதியிருக்கிறார். அவ்வையார் என்பவர் ஒருவரல்லர்; பலர் அந்தப் பெயரில் எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பதிவுசெய்யும் நோக்கில் இவர் எழுதிய ‘அவ்வையார் படைப்புக் களஞ்சியம்’ சிறந்த ஆய்வு நூல்.