

பயணங்களே மனிதர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வித்திட்டன. ஆதிகால மனிதர்கள் உணவு தேடி, தங்கள் வாழ்வாதாரத்துக்காகப் பயணங்களை மேற்கொண்டனர். 15ஆம் நூற்றாண்டில் புதிய நாடுகளைக் கண்டறியும் ஆவல் பலருக்கும் ஏற்பட்டது.
புதிய நிலப்பகுதிக்குப் பயணித்தவர்கள் அங்குள்ள இயற்கை வளம், விளைந்த பொருள்கள், மக்களின் வாழ்க்கை போன்றவற்றையும் பதிவு செய்தனர். கண்டும் கேட்டும் பதிவு செய்த தகவல்களில் பிழைகளும் கற்பனைகளும் மிகுந்திருந்தன.
இந்தத் தகவல்களை அறிந்தவர்கள், அந்த நாடுகளைக் காணும் ஆவலில் அவற்றை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர்.
பிரெஸ்டர் ஜான் எனும் மன்னர் தன் நாட்டைக் குறித்து, ‘எங்கள் நாட்டில் உள்ள சுனையின் நீரைப் பருகியவர்கள் சாகாவரம் பெறுவார்கள்.
மிடிரியோஸி என்கிற அரிய ரத்தினத்தை அணிந்தால், பார்வை போனால்கூட மீண்டுவிடும். நெருப்பில் வாழும் சாலமண்டர் விலங்கைச் சுற்றி மெல்லிய சவ்வால் உருவாகும் பட்டுநூலால் ஆடைகளைத் தயாரிக்கிறோம்.