

டிஸ்கவரி புக் பேலஸ்: சென்னை கே.கே.நகரில் இயங்கிவரும் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் 'புத்தக இரவு' நிகழ்வு நடைபெறவுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்கி, மறுநாள் ஜனவரி 1 இரவு 10 மணி வரை மொத்தம் 36 மணிநேரம், 15% சிறப்புத் தள்ளுபடியுடன் புத்தகக் காட்சி நடைபெற உள்ளது. இதில், 31ஆம் தேதி மாலை நாயகிகள் வழங்கும் ‘ரெட்ரோ ஈவினிங் ப்ளாஷ்பேக் போகலாமா’ நிகழ்வு நடைபெறும். அன்று இரவு, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதுடன், எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் தலைமையில் 100 எழுத்தாளர்கள் வாசகர்களை சந்தித்து புத்தகங்களில் கையெழுத்திடும் மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வும் நடைபெற உள்ளது. மேலும், புத்தகங்கள் வாங்கும் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதத்தில் சிறந்த வாசகர் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பாரதி புத்தகாலயம்: சென்னை 'பாரதி புத்தகாலயம்' மற்றும் 'புக் பார் சில்ரன்' இணைந்து நடத்தும், 'புத்தகங்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம்' நிகழ்வு, சென்னை தேனாம்பேட்டை, இளங்கோ சாலையில் உள்ள அரும்பு அரங்கத்தில் வரும் 31ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை மூன்று அமர்வுகளாக நடைபெற உள்ளது. முதல் அமர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில், 'இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100' என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுகிறது. மூத்த பத்திரிகையாளர் என்.ராம் நூலை வெளியிட, சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி டி.இந்துமதி பெற்றுக்கொள்கிறார். இரண்டாவது அமர்வு எழுத்தாளர் கமலாலயன் தலைமையில் நடைபெறுகிறது.