

நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம். ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம்.
அந்த மாற்றத்திற்கான புரிதலைக் கிராம சபை வழியாக உருவாக்க வேண்டும். அதற்கான சிறந்த வழிகாட்டி நூலாக இந்தப் புத்தகம் விளங்குகிறது. புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளை நிறைவேற்றுவதே கிராம சபையின் ஆத்மார்த்தப் பணி என இந்த நூல் வலியுறுத்துகிறது.
கிராம பஞ்சாயத்துகளை நீடித்த, நிலைத்த வளர்ச்சியை உருவாக்கும் அமைப்பாக மாற்றுவது எப்படி என்பதற்கான தெளிவான செயல்முறையையும் இந்த நூல் வழங்குகிறது.
ஊராட்சித் தலைவர் என்பவர் யார்? அவரின் தகுதிகள் என்ன? என்ன திறன்களை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும்? அவர் கிராமத்தை எவ்வாறு வழிநடத்த வேண்டும்? போன்ற கேள்விகளுக்குப் பேராசிரியர் பழனித்துரை ஆழமான விளக்கங்களை அளிக்கிறார்.