

வாழ்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியே இலக்கியம் என்பர் சான்றோர். ச.ஆனந்தகுமார் எழுதிய ‘முத்தமிடும் கூழாங்கற்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பு வாழ்க்கையின் பல்வேறு தருணங்களை மிக நுட்பமாக அழகியலோடு வெளிப்படுத்தி நிற்கிறது.
அதில் நவீன மற்றும் நகர வாழ்க்கையை விமர்சித்து, அதன் கோரமுகங்களைக் காட்டி நிற்கும் கவிதைகள் ஏராளம். ‘தேடித்தேடிச் சோர்ந்து போனது பறவை / மரங்கள் தொலைந்த பெருநகரில்’ என்பது அதன் ஒரு முகம். பல்வேறு காட்சிகளும் கவிதையாய் மாறி உள்ளம் குழைக்கின்றன.
விழியற்ற தெருப்பாடகர், மழையில் தவிக்கும் பிச்சைக்காரர், கணக்குத் தெரியாத அம்மா, அழைப்பே வராத திறன்பேசியைச் சீர்செய்யக் கேட்கும் முதியவர் எனக் கனக்கச் செய்யும் கவிதைகளும் நிரம்பி வழிகின்றன. அதிலும் முதுமையில் ஏற்படும் தனிமை பற்றிய கவிதைகள் சிறப்பானவை. மனித உணர்வுகளை மிகத் துல்லியமாகவும் கவனத்தோடும் கையாண்டு கவிதை செய்துள்ளார் எழுத்தாளர்.