

மௌனம் என்பது சத்தமற்ற நிலை அல்ல, அது ஓர் ஆழமான மொழியும் வலிமையான ஆயுதமும் ஆகும். ‘மெளன மொழி’ எனும் இக்கவிதைத் தொகுப்பில் உமையாள் மீனாட்சிசுந்தரம் 150 கவிதைகளை எழுதியிருக்கிறார்.
இதிலிருந்து தமிழர்களின் வாழ்வியல் தன்மைகளை உணர முடிகிறது; சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறையையும் அறிய முடிகிறது. புலம்பெயர்ந்து வாழும் மக்களின் ஆதங்கத்தை இவர் ‘என் வாழ்வு...?’ என்கிற தலைப்பில் எழுதுகையில், ‘பிறந்த மண்ணை விட்டு/ பெற்ற தாயை விட்டு/ ஓடி விளையாடிய ஊரைவிட்டு/ தேகம் சிலிர்த்த காற்றை விட்டு/ நாடுவிட்டு நாடு வந்து/ சேர்கின்ற செல்வம் எல்லாம்/ கோட்டை கட்டி வாழ அல்ல/ சிறு கூடு கட்டி வாழ்வதற்கே/ வெளிநாட்டு மோகத்தால்/ வாக்கப்பட்டு நானிங்கிருக்க/ எனக்கு வாக்கப்பட்டவளோ அனுமதியின்றி (விசா இன்றி) அங்கிருக்க/ இளமையை மறந்து இயந்திரமாய் மாறி/ இன்றையப் பொழுதினைக் கடந்து செல்கின்றேன்... இப்படியாக அயலகத்தில் வசிக்கும் ஒருவரின் வாழ்வு எதிர்காலத்தில் என்னவாகுமோ? என்கிற எதிர்பார்ப்பிலும், ஏக்கத்திலும் கடந்து செல்கிறது’ என்பதை வேதனையோடு இவரது கவிதை வரிகள் பதிவு செய்கின்றன.