

‘திராவிட மாதிரி’ என்கிற வரையறை, தேசிய அரசியலிலும் கூர்ந்து கவனிக்கப்படுகின்றது. 1920லிருந்து 1937 வரைக்குமான நீதிக்கட்சியின் ஆட்சி, 1967லிருந்து தற்போது வரைக்கும் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வசப்படுத்தும் ஆட்சிகள் என திராவிட இயக்கக் கருத்தியல் தமிழ்நாட்டின் அரசியலில் மிக ஆழமாக வேர் பரப்பியிருக்கிறது.
நெடிய வரலாறு கொண்டதும் அரசியல், சமூக, பொருளாதார நோக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுமான திராவிட இயக்கம் குறித்துப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை தனிநபர்களாலும் அமைப்புகளாலும் சாத்தியமானவையே தவிர, முறையாகத் தொகுக்கப்பட்ட, அரசு தரப்பிலான நூலாக வெளியாகவில்லை.
‘திராவிடக் களஞ்சியம்’ திட்டம், அந்தக் குறையைத் தீர்த்துள்ளது. குறிப்பிட்ட கருப்பொருள் குறித்துப் பல அறிஞர்கள் எழுதியவற்றைத் தொகுத்துத் தருவதே களஞ்சியமாகும். திராவிட இயக்கத் தலைவர்களின் சீர்திருத்தங்கள், ஆட்சிப் பணிகள், அவர்களின் சொற்பொழிவுகள், கலை ஆக்கங்கள் போன்றவை குறித்த செய்திகள் திராவிடக் களஞ்சிய நூல்களில் செறிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
மூத்த திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன், பேராசிரியர் வீ. அரசு, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், தலித் முரசு ஆசிரியர் புனிதப் பாண்டியன், திராவிட இயக்க ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன், பேராசிரியர் ஜெ. ஹாஜாகனி, சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியரான எஸ். ஆனந்தி, பேராசிரியரும் அருட்தந்தையுமான ஜோ.அருண், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந.அருள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் ஆலோசகர் மூ.அப்பணசாமி, அனைத்திந்தியக் குடிமைப் பணி பயிற்சி மைய முதல்வரான முனைவர் தே. சங்கர சரவணன் ஆகியோர் அடங்கிய வல்லுநர் குழு இதற்காகக் கடின உழைப்பைச் செலுத்தியுள்ளது.
திராவிடம்: மானுடவியல் கருத்துருவம், திராவிடக் கருத்து மரபுகள், நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார் சிந்தனை, அறிஞர் அண்ணா சிந்தனை, கலைஞர் மற்றும் பிற திராவிடச் சிந்தனையாளர்கள், திராவிட இயக்கப் பெண் சிந்தனையாளர்கள், திராவிட இயக்கமும் சமூக - பண்பாட்டு - பொருளாதார மாற்றங்களும், திராவிட இயக்க ஆவணங்கள், சிறுகதைகள், கவிதைகள், கலைகள் என 13 தொகுதிகள் திட்டமிடப்பட்டு, இப்போது 7 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.