

இளம்பருவ வாழ்க்கை வெவ்வேறு விதமானவை. ஹெலன் கெல்லருக்கு மனக்கண்ணால் மட்டுமே உலகை அறிந்துகொள்ளும் இளம்பருவம், ஆனி ப்ராங்குக்கு இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களிடமிருந்து தப்பிக்க, தலைமறைவாக வாழ நேர்ந்த இளமைப்பருவம்.
நாடோடியாக வாழநேர்ந்த ஃபெரியோவின் இளம்பருவத்தைப் பேசும் இந்நாவல், மத்திய ஆப்பிரிக்காவின் ஷாட் (Chad) நாட்டில் நடந்த போர்ச்சம்பவங்களை பேசுகிறது.
மணலும் புழுதியுமான நிலப்பரப்பில் மைனாக்கள், காட்டுக்குருவிகள், கருஞ்சிலந்திகள் என இயற்கை உறவுகளில் திளைப்பவனாக இருக்கிறான் சிறுவன் ஃபெரியே. தனது இளம்பருவம் முழுவதும் நிறைய கேள்விகள் அவனுக்கு எழுந்துகொண்டேயிருந்தன.
பல்லி ஏன் பச்சையாக இருக்கிறது? வண்டுக்கு ஏன் நான்கு சிறகுகள்? பட்டாம்பூச்சிக்கு ஏன் இரண்டு மட்டும்? இந்த மணல் எங்கிருந்து வருகிறது? மழை என்றால் என்ன? என கேள்விகள் நீள்கின்றன.