

க.நா.சு. தனது இளமைக் காலத்திலிருந்து 85 வயது வரை, 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்நாளின் பெரும்பகுதி எழுதுவதிலேயே செலவிட்டவர். காந்தி வாழும் காலத்திலேயே, 1930களிலான கல்லூரிக் காலங்களில் அவரைப் பற்றி அமெரிக்காவின் ‘யூனிடி’ இதழில், ‘காந்தி தி மேன் அன்ட் மகாத்மா’ என்ற கட்டுரையை க.நா.சு. எழுதியுள்ளார்.
தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதிவந்தது க.நா.சு.வின் தந்தைக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளித்தது. ஒருகட்டத்தில் ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்தி இனி தமிழில்தான் எழுதவேண்டும் என்று க.நா.சு. முடிவெடுத்ததை அவரது தந்தை அறிந்து, தனது பொருளாதார ஆதரவை நிறுத்திக்கொள்கிறார்.