

நேற்றைப் போலவேதான் இன்றும் தெரிகிறது. ஆனால் அது நேற்றாக இருப்பதில்லை. அதைப் போலத்தான் நேற்றிருந்த சிறார் இலக்கியம் இன்றில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் நவீனத் தமிழ்ச்சிறார் இலக்கியம் மிக விரைவான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது நாளும்பொழுதும் மாறிக்கொண்டேயிருக்கிறது. மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. புதிய படைப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. புதிய பார்வைகள், புதிய வடிவங்கள், புதிய கருப்பொருள்கள், புதிய மொழிநடையில் படைக்கப்படுகின்றன.
நவீனத் தமிழ்ச் சிறார் இலக்கியம், வழக்கமான பாதைகளிலிருந்து விலகி புதிய பாதைகளை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. பழமைவாத சிந்தனைகளை, வடிவங்களை, கதாபாத்திரங்களை, காட்சிகளை, உதிர்த்து புதிய சிறகுகளுடன் கம்பீரமாக பறக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால் வானத்தை இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை.