

'எழுதுக' புத்தகம் எழுதும் இயக்கம் சார்பில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடைபெற்ற விழாவில், கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எழுதிய 50 நூல்களை முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்டார். அருகில் நியூ செஞ்சுரி பதிப்பகத்தின் மேலாண் இயக்குநர் சந்தானம், இளைஞர் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜா, கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தீஸ்வரி உள்ளிட்டோர் உள்ளனர். | படம்: ம.பிரபு |
சென்னை: கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எழுதிய 50 நூல்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டார்.
சென்னையில் பின்தங்கிய பகுதிகளுள் ஒன்றாகக் கருதப்படும் கண்ணகி நகரில் பள்ளி மாணவர்களின் படைப்பாக்கத் திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்களை படைப்பாளிகளாக்கும் நோக்கிலும் ‘எழுதுக’ புத்தகம் எழுதும் இயக்கம் சார்பில் வாரஇறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
அவ்வாறு பயிற்சி பெற்ற கண்ணகி நகர் அரசு பள்ளி மாணவர்கள் எழுதிய 50 நூல்களை நியூ செஞ்சுரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அந்நூல்களின் வெளியீட்டுவிழா கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரும், ‘எழுதுக’ இயக்கத்தின் வழிகாட்டியுமான வெ.இறையன்பு கலந்துகொண்டு 50 நூல்களையும் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பின்தங்கிய பகுதியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே நேரத்தில் 50 நூல்களை எழுதி வெளியிடுவது என்பது வரலாற்றுச் சாதனை. கண்ணகி நகரின் மேம்பாட்டுக்காக கடந்த 2018 முதல் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எழுதுவது என்பது ஒரு திறன் மட்டுமல்ல அது ஒரு பொறுப்பு.
நோக்கம் நிறைவேறியதில் மகிழ்ச்சி: எழுதுபவர்கள் எழுதுவதற்கு ஏற்ப நடந்துகொண்டால்தான் சமூகம் அவர்களுக்கு உரிய மரியாதையை தரும். எனவே, எழுத்தாளர்கள் தங்களின் எழுத்துக்கு ஏற்ப வாழ்வது மிகவும் முக்கியம்.
புத்கங்கள் எழுதும் முயற்சியில் ஈடுபட்ட இந்த மாணவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், தலைமைப்பண்பும் முன்முயற்சிகள் மேற்கொள்ளும் திறனும் அவர்களிடம் வளர்ந்திருப்பதை தலைமை ஆசிரியை குறிப்பிட்டார்.
அந்த வகையில் எந்த நோக்கத்துக்காக கண்ணகி நகரில் மாணவர்களை புத்தகம் எழுத வைக்கும் முயற்சியில் ஈடுபட்டோமோ அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி.
கண்ணகி நகரில் எதற்காக இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்த பள்ளியிலும் மாணவர்கள் எழுதிய இத்தனை நூல்கள் வெளியிடப்பட்டது இல்லை. தமிழகம் முழுவதும் சேர்த்து பள்ளி மாணவர்களால் 108 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் கண்ணகி நகர் அரசு பள்ளியில் மட்டும் மாணவர்களால் 50 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதான் சிறப்பு. அறிவு எல்லோருக்கும் பொதுவானது. அது பாரம்பரியச் சொத்து அல்ல. ஆனால், அந்த அறிவை வெளிக்கொண்டுவர வேண்டும்.
அதற்கு வழிகாட்ட வேண்டும். எழுதினால் நமது கவனம் கூர்மைப்படும். நேரத்தை ஆக்கப்பூர்வமாகச் செலவிட முடியும்.உற்றுக் கவனிக்கும் திறன் அதிகரிக்கும். தலைமைப்பண்பு ஏற்படும். பார்வை தெளிவு பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
நியூ செஞ்சுரி பதிப்பகத்தின் மேலாண் இயக்குநர் சந்தானம், கண்ணகி நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தீஸ்வரி, முதல் தலைமுறை அறக்கட்டளை நிறுவனர் மாரிசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக ‘எழுதுக’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வே.கிள்ளி வளவன் வரவேற்றார்.
இளைஞர்சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோர் நோக்கவுரை ஆற்றினர். நிறைவாக ‘எழுதுக’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலமுருகன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளர் லாவண்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.