

குழந்தைகளின் உலகம் குதூகலமானது. கற்பனைகளால் நிறைந்தது. வண்ணமயமானது. ஆனால், தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கும் இந்தக் காலத்தில் பெரும்பாலான குழந்தைகள் திறந்தவெளிச் செயல்பாடுகளைத் துறந்து, திறன்பேசிகளே கதியெனக் கிடக்கிறார்கள்.
கரோனா தொற்றுக்குப் பிறகு இணையவழிக் கல்வி ஓரளவுக்குப் பரவலானதைத் தொடர்ந்து இளம் தலைமுறையினரிடம் இணையப் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது.
எதுவுமே அளவுடன் இருந்தால் தவறில்லை. ஆனால், எல்லை மீறிப் போகிறபோதுதான் பிரச்சினை தலைதூக்குகிறது. கட்டற்ற இணைய வசதியும் திறன்பேசிப் பயன்பாடும் உலகம் முழுவதும் குழந்தைகளிடையே அதிகரித்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரக் கணக்கெடுப்பு 2025-2026இன்படி இந்தியாவில் 10 – 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே திறன்பேசிப் பயன்பாடு 2020க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலத்தில் 19%லிருந்து 73%ஆக உயர்ந்திருக்கிறது.