

மொட்டைமாடியில் வடாம் காய வைக்கும்போது, காக்கைகளை விரட்ட குச்சியோடு நிற்பது போல, விமான நிலையங்களிலும் பறவைகளை ஓட்ட தனி காவலாளிகள் உள்ளனர். ஏன் இந்த ஏற்பாடு? விமானம் பறக்கும் உயரத்தைவிட மிகக் குறைந்த உயரத்தில்தான் பறவைகள் சுற்றும். விமானம் தரையிறங்கும் போதோ, ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பும் போதோ, பறவைகள் மோதும் அபாயம் அதிகம்.
இந்த மோதல் சிறியதாக இருப்பினும், விமானத்தின் முகப்புக் கண்ணாடி, இறக்கை, எஞ்சின் ஆகிய முக்கிய பகுதிகளுக்கு பெரும் சேதத்தை விளைவிக்கும். புதுடெல்லி விமான நிலையத்தில் மட்டும் ஐம்பது பேர் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சிக்கலை முன்வைத்தே ராணுவ விஞ்ஞானி டில்லிபாபுவின் ‘வெள்ளோட்டம் வெல்லட்டும்’ புத்தகம் தொடங்குகிறது. இத்தகைய வியப்பான செய்திகளிலிருந்து தொடங்கி, ராணுவ தொழில்நுட்பத்தின் சுவாரசியமான உலகிற்கு இந்நூல், நம்மை அழைத்துச் செல்கிறது. முதல் பகுதியிலேயே ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, ஒரு சிறு பறவை கூட விமானத்தின் அதிவேகத்தில் மோதினால் எவ்வளவு அழிவு விளைவிக்கும் என்பதை விளக்குகிறார்.