

ஒரு நூல் என்பது எழுதியவரின் வாழ்க்கையையும் எழுதப்பட்டவர்களின் வாழ்க்கையையும் பொதிந்து வைத்துள்ளது. வாசகர்களும் அதைத் தங்கள் வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி கொள்ள வாய்ப்பை வழங்கினால் அந்த நூல் தவிர்க்க முடியாததாகிறது.
இந்தப் பிணைப்புதான் நூல்களின் இடையறாத வரவுக்கு அடிப்படையாக உள்ளது. ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர் அ. பிச்சை இதை ஒரு மொழிக்குள் நிகழும் ரத்த ஓட்டமாகவே காண்கிறார் எனலாம்.
நீண்ட நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றை ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்குமானதாகத் தனித்தனியாக எழுத வேண்டும் என்கிற வேட்கையால் உந்தப்பட்டவர் இவர். இந்திய விடுதலைக்கு முன்பிருந்தும், 1950லிருந்து 1980வரையும் பத்து ஆண்டுவாரியாக தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி குறித்துப் பதிவு செய்யும் நோக்கத்துடன் அ. பிச்சை எழுதிய நூல்கள் அவரது அடையாளமாகி விட்டன.