

எழுத்தாளர் என்பதையும் தாண்டி ஒரு மனுஷியாக என்னை பிரமிக்க வைத்தவர் ஆர்.சூடாமணி. மிகவும் பண்பட்ட, பக்குவமான பெண்மணியாக அவர் இருந்தார். “இப்படிதான் இருக்க வேண்டும் என்பதை உங்களுக்கு உணர்த்தியது யார்” என்று நான் ஒருமுறை கேட்டபோது அவர் உச்சரித்த பெயர் “அம்மா”.
“அரக்கு கொட்டடிப் புடவை, முகத்தில் வாடாத புன்னகை, சிறியதும் சக்தி வாய்ந்ததுமான கண்கள், ச்சீ என்று சொல்லியறியாத செதுக்கியெடுத்த உதடுகள், கோடாலி முடிச்சுக்குள் மூடப்பட்டிருக்கும் புஷ்பம். வாசனை மட்டும் வேண்டும் அவளுக்கு. பூ ஆடம்பரமாக வெளியில் தெரியக் கூடாது அவளுக்கு. நெற்றியில் அகலமான குங்குமப்பொட்டு” என்று தன் தாய் கனகவல்லியை விவரித்து எழுதியிருக்கிறார் சூடாமணி.
கலை உணர்வு கொண்ட கனகவல்லி, நிறைய சிற்பங்களையும் ஓவியங்களையும் படைத்தவர். சூடாமணிக்கு இருபத்து நான்கு வயது ஆனபோது புற்றுநோயால் தாக்கப்பட்டு இறந்துபோனார் கனகவல்லி. சார்புநிலையில் இருந்த சூடாமணிக்கு இது மாபெரும் இழப்பு.
சூடாமணியும் அவரது சகோதரிகளும் முப்பது வயதைக் கடந்த நிலையில் ஒரு சந்திப்பு நேர்கிறது. அக்கா லக் ஷ்மி ஆந்திராவின் எல்லையில் வால்டேருக்கு அருகில் இருந்த மலைப்பிரதேசத்தில் வசித்துவந்தார். அவர் அழைப்பின் பெயரில் சூடாமணியும் சகோதரி பத்மாஸனியும் அங்கே புறப்பட்டுப் போய் மூன்று வாரம் தங்கினார்கள்.