

தொடக்கப் பள்ளியில் இருந்து கல்லூரிவரை பயின்ற நினைவுகளை ஒரு மாணவரின் பார்வையில் முழுமையான நினைவுகளின் பெட்டகமாகச் சுவைபட நூலாக்கியிருக்கிறார், இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் ந.முருகேசபாண்டியன்.
மஞ்சள் பையில் கல் சிலேட், குச்சி, அ-ன்னா ஆவன்னா அட்டையுடன் தந்தையின் இடதுகைச் சுண்டுவிரலைப் பிடித்தவாறு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஒன்னாப்புச் சேர மகிழ்ச்சியோடு சென்ற சிறுவனின் நினைவுகளோடு வாசகரும் 1962இல் பயணிக்கத் தொடங்குவர்.
வீட்டைப்போலவே கடுமையான தண்டனைகளும் கணக்கு, ஆங்கிலம் போன்ற பயமுறுத்தும் பாடங்களும் நிறைந்த பள்ளிக்கு வராமல் ஏமாற்றும் சிறுவர்களை அழைத்துவரச் சென்ற நினைவுகள் குழந்தைப் பருவ சாகசம்.
சேட்டைக்காரப் பிள்ளைகளைத் திருத்துவதாக நினைத்து, கால்களைச் சங்கிலியால் கட்டி வைத்தல் உள்ளிட்ட தண்டனைகளைக் கொடுக்கும் சித்திரவதைக் கூடங்களாகவும் பள்ளிகள் இருந்திருக்கின்றன. அதனாலேயே பள்ளியைவிட்டு இடைநின்ற பலரைப் பற்றிய பதிவுகள் முக்கியமானவை.