

வரலாறு, புனைவு, மாயமெய்மை இம்மூன்றின் பின்னலை வாசிப்பனுபவமாக்குகிறது ‘இஸ்தான்புல் பேரங்காடி’ நாவல். புகழ்பெற்ற படைப்பாளி ஃபூவாட் செவிமை துருக்கிய மொழியில் ‘கப்பாலிசார்ஷி’ (வணிக வளாகம்) என்ற தலைப்பில் எழுதியதன் தமிழாக்கம் இது.
இன்றைய நவீன மால்களுக்கு முன்னோடியாக 500 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டது அந்த வளாகம். உதுமான் பேரரசின் மன்னர் இரண்டாம் மெஹ்மத், புதிய தலைநகரத்தின் வலிமைக்குப் பொருளாதார வளர்ச்சியின் தேவையை உணர்ந்தவராக வளாகத்துக்குத் திட்டமிடுகிறார்.
வரலாற்றின் இந்த முனையிலிருந்து, மாயமெய்மை ரசனைக்குமான விருந்து மண்டபமாக நாவலைக் கட்டியிருக்கிறார் ஃபூவாட். பளிங்குக் கற்களுடன் ஒரு சரக்குப் படகு கடலில் மூழ்குகிறது.
பளிங்கு வணிகர் காப்பாற்றப்படுகிறார்; எனினும் அவருக்கு ஏற்பட்ட இழப்பால் மனநலம் பாதிக்கப்பட்டு நகரில் சுற்றித் திரிகிறார். சிற்பி நசார் உஸ்தா அந்தக் கற்களுக்காகக் காத்திருக்க, அவரிடம் மீட்கப்பட்ட ஒரேயொரு பளிங்குப் பாளம் தரப்படுகிறது.