

மரபில் புலமையும் நவீன இலக்கியத் தோய்வும் ஒருங்கே அமையப்பெற்ற வெகு சிலரில் கல்யாணராமன் முக்கியமானவர். ஏறக்குறையப் பதினைந்து ஆண்டுக் காலப் பரப்பில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘அமுதின் அமுது’, ‘நடுப்போரில் தீவைத்தல்’ என இரு நூல்களாக வெளிவந்துள்ளன.
பல்வேறு இலக்கிய வகைமைகள் மற்றும் இலக்கணம், சினிமா, மொழிபெயர்ப்பு, ஆளுமைகள் என்ற ரீதியிலான கட்டுரைகள் இவை. மரபின் வாசகர் நவீனத்தையும், நவீன வாசகர் மரபையும் தவிர்க்கக் கூடாது என்பதற்காக, மரபையும் நவீனத்தையும் கலந்தே ஒவ்வொரு நூலிலும் அமைத்துள்ளது சரியெனத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கட்டுரையிலும் ஏற்கெனவே நிலவி வரும் கருத்துகளைத் தன் நவீனப் பார்வைக் கோணத்தால் கட்டுடைத்துப் புதிய திறப்புகளைக் கல்யாணராமன் நிகழ்த்துகிறார். உதாரணத்துக்கு, ‘அன்பை இழப்பதையே பெண் துறவாகக் கருதுகிறாள்’ என்பதைச் சாத்தனாரின் ‘காப்பிய விசாரமாக’க் காண்கிறார்.