

பேராசிரியர் ஆறு. இராமநாதன் நாடறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர். ஐம்பது ஆண்டுகளாக நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர். கவிதை, சிறுகதை எனத் தொடங்கி நாட்டுப்புறவியல் ஆய்வுகளில் நிலை கொண்டவர். தமிழ் நாட்டுப்புறவியல் புலத்துக்கு இவரின் ஆய்வுகளும், களப்பணியும், தொகுப்புகளும் முக்கியப் பங்களிப்பை அளித்துள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களைத் தந்தவர்.
நாட்டுப்புற இலக்கியச் சேகரிப்பு, வகைப்பாடு, பதிப்பு, நாட்டுப்புறக் கலைகள், நாட்டுப்புற வழக்காறுகள், நாட்டுப்புறவியல் கல்வி, கோட்பாட்டு ஆய்வுகள், நெறியாளுகை, கள ஆய்வு, நாட்டுப்புறவியல் அமைப்புகள் எனப் பல தளங்களிலும் செயல்பட்டு வருபவர். தமிழ் நாட்டுப்புறவியலின் முன்னோடியாகத் திகழும் இவரின் அண்மைப் படைப்பு, ‘களப்பணி காட்டுணவு இன்னும் சில...’ எனும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
இந்நூலில் 24 கட்டுரைகள் உள்ளன. முதல் பகுதியில் அமைந்துள்ள 12 ஆக்கங்களும் நாட்டுப்புறவியல் துறையில் பன்முக வளர்நிலைகளைச் சுட்டுவதாக அமைந்துள்ளன. நாட்டுப்புற இலக்கியங்களையும், கலைகளையும், வழக்காறுகளையும், பண்பாட்டுப் பொதிகளாகக் கொண்டு பயணத்தைத் தொடங்கிய நாட்டுப்புறவியல், இன்று பல்வேறு கொள்கை, கோட்பாடுகளை உள்ளடக்கியப் பண்பாட்டு ஆய்வுத்துறையாக மலர்ச்சிப் பெற்றுள்ளது.
நாட்டுப்புற இலக்கிய ஒப்பீடு, நாட்டுப்புற மரபறிவு, தொழில்நுட்பம், தாவர - உயிரிய வழக்காறுகள், வாய்மொழி வரலாறு, பொருள்சார் பண்பாடு எனப் பண்பாட்டியல் புலமாக அது வளர்ச்சி பெற்று வருகிறது என்பதை இக்கட்டுரைகள் உணர்த்துகின்றன. ‘கள ஆய்வுகள்’ எனும் கட்டுரை, நாட்டுப்புறவியல் ஆய்வுகளின் அடித்தளமாக விளங்கும் கள ஆய்வின் பல்வேறு நுட்பங்களையும் சுட்டுவதாக அமைகிறது.