

வாழ்வின் உன்னதமான தருணங்களை ரசனையுடன் தரிசிக்கத் தரும் அண்டனூர் சுரா, துயரமான களங்களைப் பதிவு செய்ய முற்படும்போது ரத்தமும் சதையுமாய் ஈரப் பிசுபிசுப்பை வாசக மனத்துள் கடத்திச் செல்பவராக இருக்கிறார். ‘அண்டனூர் சுரா சிறுகதைகள் 100’ உருவத்தில் மட்டுமன்றி உள்ளடக்கத்திலும் வசீகரிக்கிறது.
இத்தொகுப்பின் முதல் கதையான ‘மிடற்றுத் தாகம்’ அகதிகளின் துயர வாழ்வை, தமிழ் எழுத்துலகம் இதுவரை அறியாத காட்சிகளில் எடுத்து வைக்கிறது. துவண்டிருக்கும் குழந்தையுடன் வீடுவீடாய்ப் பாலுக்காக அலைவுறும் தாய், வாசிப்பவரைப் பதற்றத்திற்கு உள்ளாக்குகிறாள்.