Published : 14 Oct 2017 10:21 AM
Last Updated : 14 Oct 2017 10:21 AM

தொடர்கதைகளின் காலம் தொடராதா?

த்திரிகை தொடர்கதைகளின் மரபு மிகவும் வளமானது. உலகெங்கும் நூறாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கதைகள் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. ஆனால், சமீப காலமாகப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் ஒப்பீட்டளவில் குறைந்திருக்கின்றன. சமூகத்தின் மனநிலையில் தொழில்நுட்பம் ஏற்படுத்திய மாற்றங்கள் போன்றவைதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது.

தொடர்கதைகள் என்றாலே அவை ஜனரஞ்சகமானவை என்று தீவிர இலக்கிய வாசகர் பலரும் நினைக்கக்கூடும். புகழ்பெற்ற உலக நாவல்கள் பலவும் தொடர்கதைகளாகப் பத்திரிகைகளில் வெளிவந்தவையே. டால்ஸ்டாயின் ‘போரும் சமாதானமும்’, சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்கள் என்று உலக அளவில் பல உதாரணங்கள் காட்டலாம். தமிழின் பிரபல நாவல்கள் பலவும் அப்படித்தான். கல்கியின் நாவல்கள், கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’, சாண்டில்யனின் ‘கடல்புறா’, சாவியின் ‘வாஷிங்டனில் திருமணம்’ போன்ற வெகுஜன ரசனைக்கேற்ற நாவல்கள் மட்டுமல்லாமல் ஜெயகாந்தனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ஜானகிராமனின் ‘மோக முள்’, கி.ராஜநாராயணனின் ‘கோபல்லபுரத்து மக்கள்’, பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’, தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ போன்ற தீவிர இலக்கிய நாவல்கள் பலவும் தொடர்கதைகளாகப் பத்திரிகைகளில் வெளிவந்தவைதான். இவற்றில் கணிசமான நாவல்கள் சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கின்றன. ஆகவே, வெகுஜன வாசிப்பு, தீவிர இலக்கிய வாசிப்பு என்று இரண்டு வகையான வாசிப்புக்கும் தொடர்கதைகள் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

தொலைக்காட்சி யுகம் தொடங்கும் வரை தொடர்கதைகள் உச்சத்தில் இருந்தன. அப்போதெல்லாம், வாராவாரம் பத்திரிகைகள் வெளிவரும் தினத்துக்காகக் காத்திருந்து, பத்திரிகையை வாங்கியவுடனே கடையிலேயே நின்று தங்கள் அபிமானத் தொடர்கதையின் அந்த வார அத்தியாயத்தைப் படித்து முடிப்பவர்கள் ஏராளம்! அதேபோல் படித்து முடித்தவுடன் அந்த அத்தியாயங்களைக் கிழித்துவைத்து, புத்தகம்போல் தைத்துக்கொண்டு படிப்பவர்களும் நிறைய. அந்தத் தொடர்கதைகள் புத்தகங்களாகவும் பின்னர் வரும்தான். ஆனால், பத்திரிகைகளிலிருந்து கிழித்துவைத்து, புத்தகமாகத் தைத்துக்கொண்டு படிப்பதன் சுகமே தனி. அந்தக் கதைக்கு வரையப்பட்ட படங்கள், தொடர்கதைக்குத் தொடர்பில்லாத வகையில், ஆனால் பிற்பாடு படிக்கும்போது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இடம்பெற்றிருக்கும் துணுக்குகள், நகைச்சுவைகள், கேலிச்சித்திரங்கள், விளம்பரங்கள், அறிவிப்புகள் போன்றவை தனித்த அனுபவத்தைத் தருபவை. அந்தத் தொடர்கதைக்குக் காலத்தின் வாசனையைத் தருபவை.

தொலைக்காட்சியின் வருகைக்குப் பிறகும் இணையம், கைபேசியின் பெருக்கத்துக்குப் பிறகும் பத்திரிகைகளில் தொடர்கதைகளின் இடம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. காத்திருந்து படிக்கும் ஆர்வமோ, தொகுத்து வைத்துப் படிக்கும் ஆர்வமோ பெரும்பாலானோருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. கடிதம், வானொலி போன்று தொடர்கதையும் ஆகிவிடுமோ என்று தோன்றுகிறது. ஒரே நேரத்தில் வெகுஜன வாசிப்புக்கும் இலக்கிய ரசனைக்கும் தீனி போட்ட தொடர்கதைகளின் செழுமையை மீட்டெடுக்க வேண்டும். அதற்குப் பத்திரிகை உலகமும் எழுத்தாளர்களும் மட்டுமல்ல, பழமையில் புதுமை காணும் பழக்கமுள்ள இந்தத் தலைமுறையும் அதில் பங்குகொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x