திண்ணை: கலை இலக்கியப் பெருமன்ற விருதுகள்

திண்ணை: கலை இலக்கியப் பெருமன்ற விருதுகள்
Updated on
2 min read

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சூரி புக் ஹவுஸும் இணைந்து வழங்கும் இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் செம்மை மணவாளனுக்கும் தமிழியல் ஆளுமை விருது முப்பால்மணிக்கும் வாழ்நாள் சாதனைக் கலைஞர் விருது மு.ஆதிராமனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கட்டுரை நூல்களுக்கான விருதுகள் கே.சுப்பிரமணியன், மருதன் ஆகியோருக்கும் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதுகள் ரம்யா அருண் ராயன், வினையன் ஆகியோருக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருதுகள் நித்தில், ராஜேஷ் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் சிறந்த சிறுவர் நூல்களுக்கான விருதுகள் சரிதா ஜோ, அருப்புக்கோட்டை செல்வம் ஆகியோருக்கும் சிறந்த நாவல்களுக்கான விருதுகள் சி.ஆர்.ரவீந்திரன், அசோக் குமார் ஆகியோருக்கும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் புதுவை சீனு.தமிழ்மணி, மோ.செந்தில்குமார் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த குறும்படத்துக்கான விருது செல்வின் ஏஜே இயக்கியுள்ள கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் பற்றிய ஆவணப்படத்துக்கும் சூரியதாஸ் இயக்கியுள்ள ’சுட்டுட்டீங்களா’ குறும்படத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உழைப்பாளர்கள் திரைவிழா

பாட்டாளி படிப்பு வட்டம் சார்பில் ‘ஒர்க்கர்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’ என்னும் பெயரில் திரைப்பட விழா மே 28 (இன்று) காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. சென்னை பாரிமுனைக்கு எதிரில், லிங்கிச் செட்டித் தெருவில் உள்ள சிங்கப்பூர் பிளாசா மூன்றாவது தளத்தில் ‘தமிழ்நாடு பேங்க் எம்ப்ளாயிஸ் ஃபெடரேஷன்’ அலுவலகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்நிகழ்வில் 9 குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன. அனுமதி இலவசம்.

ஓவியக் காட்சி, திரைவிழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்திய சென்னை கிளை சார்பில் மே 27, 28 ஆகிய இரு தேதிகளில் ஓவியக் கண்காட்சி, திரைவிழாவை ஒருங்கிணைத்துள்ளது. காலை 11.30, மதியம் 2 மணி ஆகிய இரண்டு நேரங்களில் இரண்டு நாள்கள் வீதம் நான்கு முழுநீளப் படங்கள் திரையிடப்பட உள்ளன. அமெரிக்கக் கறுப்பினப் போராளியான பிரெட் ஹாம்ப்டன், அமெரிக்க எஃப்பிஐ உளவாளியான வில்லியம் ஓ நீலால் வஞ்சிக்கப்பட்ட யதார்த்த சம்பவத்தின் அடிப்படையிலான ‘Judas and the Black Messiah’ என்கிற படம் உள்ளிட்ட முக்கியமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இடம்: மெட்ராஸ் கேரள சமாஜம், ஈவெரா பெரியார் சாலை, சென்னை. தொடர்புக்கு: 8124406627, 9840695569

தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு சிங்கப்பூரில் அஞ்சலி

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் - தமிழ் மொழிபெயர்ப்பாளராக 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய பழனியப்பன், இரண்டு வாரங்களுக்கு முன் காலமானார். சிங்கப்பூர் நாடாளுமன்றம் அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. மாணவர்களுக்கான சிங்கப்பூர் தமிழ்ச் சொற்களஞ்சியம் உருவாக்கத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார். சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் சுயசரிதையைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

கூத்துப்பட்டறை நாடகம்

கூத்துப்பட்டறையில் நாடக ஆசிரியர் ந.முத்துசாமியின் ‘படுகளம்’ நாடகம் நிகழ்த்தப்படவுள்ளது. சென்னை, விருகம்பாக்கம் அய்யப்பாநகரில் கூத்துப்பட்டறை அரங்கில் இந்நிகழ்வு மே 28, ஜூன் 3, 4 ஆகிய நாள்களில் தினமும் மாலை 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இயக்கம்: என்.சந்திரசேகர். தொடர்புக்கு: 8939548469.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in