

திருமாவேலன், விடுதலை, விஜயகுமார் ஆகியோருடன் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர்
சுப.வீரபாண்டியன் இணைந்து, 1990-களில் நடத்திவந்த இதழ் ‘இனி’. அந்த இதழ்களில் தான் சேகரித்து வைத்திருந்தவற்றிலிருந்து கட்டுரைகள், நேர்காணல்கள், கவிதைகள் ஆகியவற்றைத் தொகுத்துள்ளார் எழுத்தாளர் அழகிய பெரியவன். ‘மொழியையும் இனத்தையும் மையப்படுத்தி வெளிவந்திருந்தாலும் சாதி ஒழிப்பையும் பகுத்தறிவையும் உறுதியாகப் பேசியிருக்கிறது’ என்று ‘இனி’ இதழ்கள் குறித்த தன் பார்வையையும் இந்த நூலைத் தொகுக்க உத்வேகம் அளித்த காரணத்தையும் முன்னுரையில் அவர் பதிவுசெய்திருக்கிறார்.
பிரபஞ்சன், இன்குலாப், எஸ்.வி.ராஜதுரை, பெரியார்தாசன், திருமாவேலன், இந்திரன் என ஆளுமைகள் வாரியாக அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனைமுத்து, பாவலரேறு பெருஞ்சித்திரனார், வீரமணி, தொல்.திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், ராம்விலாஸ் பாஸ்வான் போன்ற முக்கியமான அரசியல் தலைவர்கள், ஜெயகாந்தன் உள்பட எழுத்தாளர்கள், செயல்பாட்டாளர்கள் ஆகியோரின் நேர்காணல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. - கோபால்
இனி
தொகுப்பாசிரியர்: அழகிய பெரியவன்
(உதவி: இக்லாஸ் உசேன்)
கருஞ்சட்டைப் பதிப்பகம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 044 24726408, 81229 46408
காசு... பணம்... துட்டு...
பணம் இல்லாத மனித வாழ்க்கையை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அந்தப் பணத்துக்காகத்தான் எல்லாரும் ஓடியாடி உழைக்கிறோம். அப்படி ஈட்டும் பணத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதை இந்த நூலின் வழியாக எஸ்.கார்த்திகேயன் விளக்கியிருக்கிறார்.
தொழில், வாழ்க்கை முறையில் பணம் எப்படிப் பின்னிப் பிணைந்து இயங்குகிறது என்பதையும் நிதி மேலாண்மையையும் இந்நூல் அலசுகிறது. நிதி ஆலோசகராகத் தான் பெற்ற நீண்ட அனுபவத்தை நூல் வழியாக ஆசிரியர் கடத்தியிருக்கிறார். தொழிலில் ஈடுபடுவோர் படிக்க வேண்டிய நூல் இது. - மிது
பணப் பழக்கம்
எஸ்.கார்த்திகேயன்
யா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 98409 96745
சமூக ஆன்மிகச் சீர்திருத்தவாதியின் கதை
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமய, சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டுசேர்க்கும் வகையில் காவியமாக எழுதியிருக்கிறார் கரு.நாகராசன். தொண்டை மண்டலப் படலம் தொடங்கி, உடையவர் திருநாடு அடைந்த படலம் வரை மொத்தம் 53 படலங்களில் 1,108 பாடல்களாக எழுதியுள்ள நூலாசிரியர், ‘தந்தை பெரியார் அந்தாதி மாலை’ எனும் நூலை எழுதியவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சிறுவயதிலேயே வேதங்களிலும் உபநிடதங்களிலும் இருக்கும் தத்துவங்களைக் கற்றறிந்த இராமானுஜர், ஆழ்வார்களின் பாசுரங்களைப் பெருமாள் கோயில்களில் இசையுடன் பாடுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தார்.
‘சேரிக்குள் வாழ்கின்ற சிறுவரெல்லாம் உயர்சாதி/ ஊருக்குள் வருவதற்கு உரிமையில்லை என்கின்றனர்/யாருக்கும் இதை எதிர்க்கத் துணிவில்லை;/ தீண்டாமை/வேருக்கு வெந்நீரை விரைவினிலே ஊற்றிடுவேன்’ என்று தனது இளம் பிராயத்திலேயே மனதிற்குள் உறுதியினை வரித்துக்கொண்ட பன்மொழிப் புலமை கொண்டவர் இராமானுஜர்.
ஜனநாயகம், சமத்துவம், சமதர்மம், சாதி மதப் பேதமின்மை ஆகிய கொள்கைகளை மக்களிடையே உபதேசித்து, அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டியதால், ‘சமூக ஆன்மிகச் சீர்திருத்தவாதி’ என்று அழைக்கப்பட்டார் என்கிறது இந்தப் பாடல். மரபுக்கவிதை என்றாலும் அழகிய நடையில், எளிய மொழியில் இராமானுஜரின் வாழ்க்கையைக் காவியமாக்கியிருக்கிறார் கரு.நாகராசன். - மு.முருகேஷ்
இராமானுச மாமுனிவர் காவியம்
கரு.நாகராசன்
வானதி பதிப்பகம்
விலை: ரூ.225
தொடர்புக்கு: 044 – 2434 2810