

முல்க் ராஜ் ஆனந்த், 1935ஆம் ஆண்டு எழுதிய ‘Untouchable’ என்ற நாவலின் மொழிபெயர்ப்பு ‘தீண்டாதான்.’ இந்திய ஆங்கில இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் முல்க் ராஜ் ஆனந்தின் முதல் நாவல் இது. 1947ஆம் ஆண்டு தூத்துக்குடி புதுமைப் பதிப்பகத்தார் இந்நூலின் மொழிபெயர்ப்பை வெளி யிட்டுள்ளனர்.
ஈழத்தைச் சார்ந்த கே.கணேஷ் மொழி பெயர்த்துள்ளார். 2012இல் கோவையைச் சார்ந்த முகம் பதிப்பகத்தார் ‘தீண்டாதா’னை வெளியிட்டுள்ளனர். தற்போது சீர்மைப் பதிப்பகம் இந்நாவலின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. சாகித்ய அகாடமி, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற முல்க் ராஜ் ஆனந்த், ஏறக்குறைய தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள் (1905-2004) வாழ்ந்து குறிப்பிடத் தக்க படைப்புகளை அளித்துள்ளார்.
பிறப்பால் ஒருவரைத் தீண்டத் தகாதவராகக் கருதுதல், ‘தான் தீண்டத்தகாதவர்’ என்று அவரையே நம்ப வைக்கவும் முயற்சி செய்தல் இவை இரண்டும்தான் இந்நாவலின் மையம். நாவலின் இறுதி, மூன்று தீர்வுகளை நோக்கி நகர்ந்திருக்கிறது. மூன்று தீர்வுகளுமே வெவ்வேறு அரசியல் தன்மை வாய்ந்தவை. மூவரும் அத்தகைய முடிவை நோக்கி நகர்வதற்கு வலிமையான சமூகக் காரணிகள் இருக்கின்றன என்ற விமர்சனத்தைப் பிரதி முன்வைக்கிறது. புலாந்தஷார் என்ற மலைப் பகுதியை ஒட்டிய பகுதியில்தான் இந்நாவலின் கதை நிகழ்வதாக முல்க் ராஜ் ஆனந்த் எழுதியுள்ளார்.
இந்தியாவின் எந்த நிலப் பகுதியுடனும் பொருத்திப் பார்த்து வாசிக்கும் தன்மையை இப்பிரதியின் கதை பெற்றிருக்கிறது. தோட்டிகளின் தலைவன் மகனான பாக்கா என்ற இளைஞனின் ஒருநாள் நிகழ்வுதான் கதை. வாசிப்பவர்கள் அவன் ஒவ்வொரு நாளும் இத்தகைய துயரங்களைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற முடிவுக்கு இயல்பாக வந்துசேர்வர். உண்மைக்கு மிக அனுசரணையாகப் புனைவின் கதை அமைந்துள்ளது.
இன்றும் மனித சமூக வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருப்பது ‘தீண்டாமை’. கல்வி அறிவும் சட்டப் பாதுகாப்பும் இருக்கக் கூடிய இக்காலத்திலேயே குறிப்பிட்ட சமூகத்தினர் இப்பிரச்சினையை இன்றும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய 1930களில் இந்நாவலின் கதை நிகழ்வதாக எழுதப்பட்டுள்ளது.
உயர் சாதியில் பிறந்துள்ளதாகக் கருதுபவர்கள், துப்புரவுப் பணி செய்பவர்கள் மீது நிகழ்த்தும் சாதிய வன்முறையை இந்த நாவலில் வரும் இளைஞன் பாக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், இவனும் ஆங்கிலேயர்களைப் போல தன்னைப் புனைந்துகொள்ள முயல்கிறான். அவர்களைப் போன்று உடையும் காலணியும் அணிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறான். ஆனாலும் கழிவுகளைத் தூய்மைப்படுத்தும் பாக்காவின் தொழில் பொதுச்சமூகத்திலிருந்து அவனை அந்நியப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
தன்னைச் சக மனிதனாக மதிப்பவர்களுக்காக ஏங்குகிறான். அவர்களுக்காக எதுவும் செய்யத் தயாராகிறான். ஆதிக்கச் சாதியைச் சார்ந்த ஒருவர், பாக்காவை ஏவலனாக நடத்துவதையே கௌரவமான செயலாகப் பார்க்கும் அவனது நிலைக்குப் பின்னுள்ள வலியைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கிறித்துவ மதம் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர் களைத் தங்களுடைய மதமாற்றத்துக்கு எப்படிப் பயன்படுத்திக்கொண்டது என்ற விமர்சனத்தையும் அங்கதத் தொனியில் முல்க் ராஜ் ஆனந்த் எழுதியிருக்கிறார். குப்பைமேட்டில் வசிக்கும் இவர்களிடம் தெய்விகத்தைப் பற்றியும் பரமபதத்தைப் பற்றியும் உபதேசிப்பதில் பயனென்ன உள்ளது என்ற கேள்வியைப் புனைவாசிரியர் முன்வைக்கிறார்.
விமர்சனம் செய்வதற்கும் உரையாடல் நிகழ்த்துவதற்கும் போதிய உள்ளீடுகளை இந்நாவல் கொண்டிருக்கிறது. காந்தியின் ஹரிஜன ஆதரவுக் கூட்டம்தான் நாவலின் உச்சமான பகுதி. ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கேட்கும் நாம்தான் காலம்காலமாகக் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறோம் என்ற காந்தியின் குரல் புனைவில் காத்திரமாகவே ஒலித்திருக்கிறது.
அதேநேரத்தில், காந்தி மீதான விமர்சனங்களும் சேர்த்தேதான் இறுதியில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. அசுத்தங்களைக் கையாள இயந்திரத்தை நோக்கி அனைவரும் நகர வேண்டும் என்ற தீர்வையும் புனைவு முன்வைத்திருக்கிறது. இந்தக் குரல் இன்றும் ஒலிப்பதைக் கேட்கலாம்.
தீண்டாதான்
முல்க் ராஜ் ஆனந்த்
(தமிழில்: கே.கணேஷ்)
சீர்மை வெளியீடு,
விலை: ரூ.200
தொடர்புக்கு: 80721 23326