

வெளி உலகத்தினருக்கு இன்றைய நவீன யுகத்தில் மன அழுத்தத்தைப் போக்கவும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் ஆயிரம் வழிகள் இருக்கலாம். ஆகவே, புத்தக வாசிப்பு என்பது அருகிவிட்ட பழக்கமாகிவிட்டது. ஆனால், சிறைச்சாலையைப் பொறுத்தவரை ஒருவருக்கு ‘சர்வரோக நிவாரணி’யாகத் திகழ்பவை புத்தகங்களே. ‘எப்படிப்பட்ட மனத்தெளிவு கொண்டோரையும் எதிர்மறை எண்ணங்கள் அலைக்கழிக்கும் ஒரு இடத்தில் நீண்ட நாள் இருந்தால், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் நேர்மறையாகச் சிந்திக்கவும் ஆக்கபூர்வமாகச் செயல்படவும் தூண்டுவது நிச்சயம் புத்தக வாசிப்புதான்.
அறிவு என்பதே அனுபவங்கள்தான். வாழ்க்கை என்பதே அனுபவங்களின் தொகுப்புதான். வாழ்தல் என்பதே கற்றுக்கொண்டிருப்பதுதான். அனுபவப் பகிர்வுதான் இலக்கியப் படைப்புகளாகச் சோபிக்கின்றன. இலக்கியப் படைப்புகள் என்பவை எழுத்தாளரின் கற்பனையை விற்பனை செய்வதல்ல. கற்போரை விற்பன்னராக்குவது.
படைப்புகள் என்பவை பொழுதுபோக்குக்கானவை மட்டுமல்ல; பாழ்பட்ட மனதை பழுதுபார்ப்பதாக அமைவதாகும். என்னையும் எழுதத் தூண்டியது வாசிப்புப் பழக்கம். நேர்மறையான சிந்தனையோடு படைப்பாற்றலையும் உருவாக்கித் தந்தது வாசிப்பு என்பதே உண்மை. தோப்பில் இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனித் தனிதான் என்ற பழமொழி சிறைவாசிகளுக்கே சாலப் பொருந்தும்.
ஆயிரம் பேரோடு ஒரு கூரைக்குக் கீழே இருந்தாலும் தனிமையை உணர்வது இங்குதான். அப்படியான சூழ்நிலையில் உற்ற நண்பனாய், ஓர் ஆசானாய், வழிகாட்டியாய் நின்று வழிநடத்திச் செல்பவை புத்தகங்கள் மட்டுமே. கூரைக்குள் வானம் என்பதுபோல கம்பிகளுக்குள் உலகத்தையே கொண்டு வந்து காட்சிப்படுத்துபவை புத்தகங்களே.
குறுகிய காலத்தில் பல சிறுகதைகளும் செய்திக் கட்டுரைகளும் நாவலும் படைக்க முடிந்தது என்றால் வாசிப்பு ஆர்வமே அதற்குக் காரணம். எனவே, சிறைக்குள் நூலகம் மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். சிறைவாசி ஒருவரைச் சீர்திருத்தம் செய்து மறுவாழ்க்கைக்குத் தயார்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் தலையாயது நூலகம் அமைத்தல் என்பேன்.
- டி. புதுராஜா; புழல் மத்திய சிறை, சென்னை.