மே 25: தமிழாசிரியர் சா. தர்மராசு சற்குணர் பிறந்த நாள் | மகத்தான பேராசிரியர்

மே 25: தமிழாசிரியர் சா. தர்மராசு சற்குணர் பிறந்த நாள் | மகத்தான பேராசிரியர்
Updated on
2 min read

‘நற்குணம் வாய்ந்த சற்குணர்’ என்பார் உ.வே.சாமிநாதர். ‘உண்மைத் தமிழன்பர்’ என்பார் வையாபுரியார். திருநெல்வேலியைப் பூர்விகமாகக் கொண்ட சாமுவேல் சற்குணருக்கும் ஞானப்பூ அம்மையாருக்கும் மகனாக 1877 மே 25ஆம் நாள் பிறந்தவர் தர்மராஜா சற்குணர். இவருடைய பாட்டனார் கல்வி கற்பதற்காகவே நெல்லையிலிருந்து நடந்தே சென்னைக்கு வந்ததாகவும் தந்தையார் அக்காலத்திலேயே பி.ஏ., பட்டம் பெற்று மாவட்டப் பதிவாளராகப் பணியாற்றியவர் என்றும் அ.கி.பரந்தாமனார் குறிப்பிடுகிறார்.

இத்தகைய கல்விப் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்த சற்குணர், வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தவர். ஆங்கில இலக்கியம் பயின்றாலும் தமிழிலக்கியங்களில் பெரும் ஈடுபாடும் புலமையும் கொண்டிருந்தவர். கல்லூரியில் தமிழில் முதன்மையாகத் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சேதுபதி பொற்பதக்கத்தைப் பெற்றவர்.
1905இல் சென்னை ஹாரிஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கியவர் சற்குணர்.

தமிழிலக்கியங்களின் சிறப்பைக் கற்பிக்கும் வகையில் 1925 ஜனவரியில் தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தைத் தன் சொந்தச் செலவில் தொடங்கிப் பல்லாண்டுகளாக நடத்திவந்தார். இவருடைய தமிழ்ப் புலமையையும் பணியையும் கண்டு 1928இல் அன்றைய சென்னை கிறித்துவக் கல்லூரி முதல்வர் மெஸ்டன், தம் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்ற அழைப்பு விடுத்தார். இங்கு பணிபுரிந்த ஒன்பது ஆண்டுகளிலும் மாணவர்களின் மனங்கவர்ந்த பேராசிரியராகத் திகழ்ந்தார் சற்குணர்.

மாணவர்கள் மீது அன்புகொண்டவர் மாணவர்கள் இவர் மீது கொண்டுள்ள அன்பை கண்ணாரக் கண்ட உ.வே.சா. ‘தாய்ப் பசுவைக் கண்ட கன்றுகள்போல் சற்குணரிடம் மாணவர்கள் ஓடுகின்றனர்’ என்கிறார். மாணவர் நலனே முதன்மையாகக் கொண்டவர் சற்குணர் என்பதற்கு வையாபுரியார் ஒரு சம்பவத்தைப் பதிவு செய்துள்ளார். வையாபுரியாரும் வேறு சில நண்பர்களும் பாடப்புத்தகங்கள் குறித்து ஆலோசிக்கக் கூடியிருந்தபோது, ஒருவரின் புத்தகத்தைப் பாடமாக வைக்க வேண்டும் என்று சிலர் முன்மொழிய, ‘அப்புத்தகம் முன்பே பாடமாக இருந்ததுண்டு.. அதனை மாணவர்கள் வெறுக்கிறார்கள்’ என்று அந்த நூலாசிரியர் முன்னிலையில் குறிப்பிட்டு, அதை வேண்டாம் என்று சொல்லி மறுத்திருக்கிறார் சற்குணர்.

தெரிந்தவர்கள், நண்பர்களின் புத்தகம் என்பதற்காக மாணவர்களுக்குப் பயனற்ற அல்லது வெறுக்கத்தகுந்த நூல்களை வைத்து மாணவர்களைத் துன்பத்தில் ஆழ்த்தக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார். சென்னை அரசின் பாடப்புத்தகக் குழுவில் இவர் உறுப்பினராக இருந்த காலத்தில் பிழையுடன் கூடிய நூல்களைப் பாடத்திட்டத்திலிருந்து புறக்கணித்தார். பணி ஓய்வுபெற்ற பின்பும் அவர் வீட்டில் வைத்து மாணவர்களுக்கு இலவசமாகப் பல ஆண்டுகள் வகுப்பு எடுத்திருக்கிறார்.

சற்குணர் உருவாக்கிய அறிஞர்கள் பல சிறந்த தமிழறிஞர்களை உருவாக்கிய பெருமை சற்குணருக்கு உண்டு. மயிலை சீனி.வேங்கடசாமி நூல்களில் மிக முக்கியமானவை ‘கிறிஸ்தவமும் தமிழும்’, ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’. இந்த மூன்று நூல்களிலும் நன்றியோடு அவர் நினைவுகூர்ந்திருக்கும் ஒரே பெயர் சற்குணர். மயிலையார் ‘கிறிஸ்தவமும் தமிழும்’ எழுதுவதற்கு சற்குணரின் ஒரு உரையே காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சற்குணரின் படத்தையும் இம்முதற்பதிப்பில் இணைத்துள்ளார்.

சற்குணரின் ஆறு பக்க ஆங்கில முகவுரையும் இதில் இடம்பெற்றுள்ளது. அடுத்து 1940இல் வெளிவந்த பௌத்தமும் தமிழும் நூலை மயிலையார் சற்குணருக்கே உரிமையாக்கியுள்ளார். அ.கி.பரந்தாமனார், பாலைக்கலிக்கு உரை எழுதி வெளியிட்ட தை.ஆ.கனகசபாபதி, உ.வே.சா.வின் பேரன் சுப்பிரமணியன் போன்ற இன்னும் பலர் சற்குணரிடம் பயின்ற மாணவர்கள். ‘சற்குணர் அவர்கள் மாணவர் இயற்றியது’ என்கிற வாசகம் தாங்கிய முகப்பட்டைகளுடன் இவரது மாணவர்களின் நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

சற்குணரின் அறுபதாம் ஆண்டு விழா 25.10.1937 அன்று சென்னை கோகலே மண்டபத்தில் தென்னிந்தியக் கல்விக்கழகம் சார்பில் உ.வே.சா. தலைமையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. பலரது வாழ்த்துரைகள் தொகுக்கப்பட்டு ‘சற்குணர் மலரும் சற்குணீயமும்’ என்கிற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. தாம்பரத்தில் தான் குடியிருந்த வீட்டிற்கு ‘தமிழ் அகம்” என்று பெயர் சூட்டி அழகு பார்த்தார் சற்குணர்.

தனது 76ஆவது வயதில் 23.12.1952 அன்று இயற்கை எய்திய சற்குணரின் உடல் அவர் விரும்பிய வண்ணமே புறநானூற்றோடு வைத்து அடக்கம் செய்யப்பட்டது. அவரது இல்லமான ‘தமிழ் அகம்’ இப்போது அதே பெயரில் பெண்கள் தங்கிப் படிக்கும் விடுதியாக இயங்கிவருகிறது. தமிழுக்காகவும் மாணவர் நலனுக்காகவும் வாழ்ந்த சற்குணர்கள் வரலாற்றில் என்றும் நின்று நிலவும் நல்லாசிரியர்கள்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in