Published : 21 Oct 2017 10:50 AM
Last Updated : 21 Oct 2017 10:50 AM

சிற்றிதழ் பார்வை- நம் நற்றிணை: புனைவுகளின் சங்கமம்

மிழில் இலக்கியச் சிற்றிதழ்களின் இயக்கம் பதிப்பகங்களாகப் பரிணமித்தது. தற்போது இலக்கிய நூல்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்களும் இலக்கியச் சிற்றிதழ்களை வெளியிடத் தொடங்கியுள்ளன. சிற்றிதழ்களும் பதிப்பகங்களும் ஒன்றுக்கொன்று தங்களுக்குள் கொடுத்தும் பெற்றும் இலக்கியச் சூழல்களில் நல்ல மாற்றங்களை உருவாக்கக்கூடும். வண்ணநிலவன், அசோகமித்திரன், பிரபஞ்சன் உள்பட தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் பலரின் நூல்களை வெளியிட்டுவரும் நற்றிணை பதிப்பகம் ‘நம் நற்றிணை’ என்ற கலை இலக்கியக் காலாண்டிதழைத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் வெளிவந்துள்ள முதல் இதழில், உ.வே.சா.வின் ‘என் சரித்திரம்’ நூலைப் பற்றிய அறிமுகக் கட்டுரையும், மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலாவின் நேர்காணலும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை. சி.மோகனின் தொடர் வாசகர்களுக்குப் புதிய வெளிச்சங்களைத் தரக்கூடியது. குட்டி ரேவதி, அழகிய பெரியவன், தேவகாந்தன், என்.ஸ்ரீராம். அஜயன் பாலா, சந்ரு, காலபைரவன், வண்ணதாசன், சாம்ராஜ், வண்ணநிலவன் ஆகியோரின் கதைகளும், வசமித்ர, அழகிய பெரியவன், வண்ணநிலவன் ஆகியோரின் நாவல்களிலிருந்து சில பகுதிகளும் இந்த இதழில் வெளியாகியுள்ளன.

மொத்தத்தில், சிறுகதைத் தொகுப்பொன்றை வாசித்த உணர்வே எழுகிறது. அடுத்த இதழில் கட்டுரைகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம். பதிப்பகங்களிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்கள் விலைப் பட்டியலைப் போல காட்சியளிக்கும் அபாயங்களும் உண்டு. ‘நம் நற்றிணை’ அதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும்.

-புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x