நூல் நயம்: நேசிப்பு எனும் உன்னதம்

நூல் நயம்: நேசிப்பு எனும் உன்னதம்
Updated on
2 min read

இவ்வுலகம் எனக்கானது. எல்லாவித அதிகாரமும் எனக்கு உண்டெனும் போதை எப்படி உருக்கொண்டிருக்கக் கூடும் எனும் காரணங்களுக்குச் செல்லாமல், நாமும் இப்புவியில் வாழும் பிற உயிரினங்களோடு வாழும் சிறு உயிரி என்பதைச் சொல்கிறது எழுத்தாளர் நக்கீரனின் ‘எறும்புகள்’ நூல்.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ‘மொலாய்’ காடுகள் உருவாக்கத்தில் எறும்புகளின் பங்களிப்பு குறித்த அரிய தகவலை நக்கீரன் இந்நூலில் சொல்கிறார். எறும்பு கடித்தால் உடனே அதை அடித்துக் கொன்றுவிடாது, அது உன்னை நலமா என விசாரிக்கிறது எனக் குழந்தைகளிடம் சொல்லி வளர்க்கும் தொல்குடிகளின் தொலைக்காத மனதை நமக்கானதாக்குகிறது நூல்.

எறும்புகள் உழவனுக்கு உற்ற துணையாக இருப்பதையும், நல்ல நீர் உள்ள இடங்களைக் கண்டறிய எறும்புகளைப் பயன்படுத்தியது, குப்பைகளை மக்கவைத்து உரமாக்கும் உத்தி, புற்றுக்குள் கழிவறை வைத்துக் கட்டும் நுட்பம், காடுகளில் இறந்த உயிரினங்களின் உடல் உறுப்புகளை இரையாக்கி இயற்கையைத் தூய்மைப்படுத்துதல் என நம் முன்னோடிகள் எறும்புகள்தான் என்கிற உண்மையை உணர்த்துகிறது.

எறும்புகளை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவற்றுக்கு சிட்ரஸ் மணம் பிடிக்காது, எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல் சாறு பிழிந்து, உப்பு, மிளகாய்த் தூள் போட்டு எறும்புகளை விரட்டுங்கள். தயவுசெய்து போரக்ஸ் எனும் எறும்புக் கொல்லியைப் பயன்படுத்த வேண்டாம். நம் முன்னோர்கள் அரிசி மாவால் கோலமிட்டு வாசலில் எறும்பு வளர்த்தார்கள். கொல்லையில் எறும்புப் புற்றுகளுக்கு நொய்யரிசி இட்டார்கள். வாசலும், கொல்லைப்புறமும் இல்லாத நாம் எறும்புகளைக் கொல்ல நினைக்காது நம் குழந்தைகளுக்கு எறும்புகளை நேசிக்கக் கற்றுகொடுக்க உதவுகிறது இந்நூல். - ந.பெரியசாமி

எறும்புகள்
நக்கீரன்

காடோடி பதிப்பகம்,
நன்னிலம்
விலை: ரூ.30
தொடர்புக்கு: 8072730977

ஆளுமையும் ஆய்வுக் கட்டுரைகளும்: நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார், மொழிபெயர்ப்பு, இதழியல், வரலாறு, பண்பாட்டு ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தீவிரமாக இயங்கிவருபவர். இவர், 2021இல் 60ஆம் வயதை நிறைவுசெய்தார். இதையொட்டி அவரை ஆதர்சமாகக் கொண்ட இளம் ஆய்வாளர்கள் நால்வர் ‘ரவிக்குமார் அகவை 60 நிறைவு விழா மல’ரைத் தொகுத்துள்ளனர்.

இந்த மலர் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் பரந்துபட்டத் தளங்களில் ரவிக்குமாரின் எழுத்து, ஆய்வுப் பணிகளை ஆய்வுக்கு உள்படுத்தும் 11 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதியில் மொழி/இலக்கியம், தொல்லியல்/வரலாறு, பண்பாட்டியல் ஆகிய மூன்று தலைப்புகளின் கீழ் பல்வேறு அறிஞர்கள், துறை நிபுணர்களின் 39 ஆய்வுக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன், நாட்டார் வழக்காற்று ஆய்வாளர் அ.கா.பெருமாள், மானுடவியல் ஆய்வாளர் பக்தவத்சல பாரதி, பேராசிரியர் வீ.அரசு, பேராசிரியர் க.பஞ்சாங்கம், வரலாற்று ஆய்வாளர் சா.பாலுசாமி, கல்வெட்டு ஆய்வாளர் மார்க்சிய காந்தி உள்ளிட்ட முக்கியமான ஆளுமைகளின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த 39 கட்டுரைகளில் 33 கட்டுரைகள் இந்த மலருக்காகவே எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. - கோபால்

நூலறிவன் (ரவிக்குமார் அகவை 60
நிறைவு விழா மலர்)
தொகுப்பாசிரியர்கள்: மு.செல்வக்குமார்,
சீ.சியாமளா கெளரி,
பொன்.பிரகாஷ், அ.அன்பரசன்

வெளியீடு: மணற்கேணி
விலை: ரூ.1000
தொடர்புக்கு: 04146-355746

ஆவணமாகியிருக்கும் நாடகச் சரித்திரம்! - தமிழ் நாடகச் சூழலின் தொடக்கம் முதல் அதன் பல்வேறு வளர்ச்சிப் பரிமாணங்களையும் பதிவுசெய்திருக்கும் நாடக நூல் இது. தொல்காப்பியம் தொடங்கி வரலாற்றுக் காலங்களின் வழியாகச் சமகாலத்தின் போக்குகள் வரை பதிவுசெய்துள்ளது. அதன் நீள அகலங்களை ஆழத்தை அணுஅணுவாக அலசுகின்றன, இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள். நூலாசிரியருக்கு நாடகத் துறை சார்ந்திருக்கும் அனுபவச்செறிவு கட்டுரைகளில் பிரதிபலிக்கின்றன.

‘நாடகத் தந்தை’ என்று புகழப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி நாடகத் துறைக்குப் பங்களித்த பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய விவரங்கள், அவர்கள் எழுதிய நாடகங்கள், நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்ட நாடகக் கலைஞர்கள், நாடக மன்றங்கள், திராவிட இயக்க நாடகங்கள், நவீன நாடகங்கள், பிரபல எழுத்தாளர்கள் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி உள்ளிட்ட படைப்பாளிகளின் நாடகப் பங்களிப்பு, நாடகம் குறித்துத் தமிழில் வெளிவந்திருக்கும் நூல்கள், அகரவரிசையில் தமிழ் நாடகங்கள் என எண்ணற்ற தகவல்களின் சுரங்கமாகத் திகழ்கிறது இந்நூல். - யுகன்

தமிழ் நாடகச் சரித்திரம்
(மரபிலிருந்து நவீனத்துக்கு)

பேரா.முனைவர் சு.சண்முகசுந்தரம்
விலை: ரூ.400
தொடர்புக்கு: 9840480232

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in