

தமிழறிஞர் அ.தட்சிணாமூர்த்திக்கு பாஷா சம்மான் விருது, தஞ்சாவூரில் உள்ள அவரது வீட்டில் நேரடியாக வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டாலும், ஒவ்வொரு மொழிக்கும் சுழற்சி முறையில் மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் வாழ்நாள் சாதனைக்கான இந்த விருதைத் தமிழுக்காகப் பெறும் மூன்றாவது ஆளுமை தட்சிணாமூர்த்தி.
விருது விழாவில் அவரால் நேரடியாகப் பங்கேற்க முடியாததால், சாகித்திய அகாடமி தமிழ் ஒருங்கிணைப்பாளர் இரா.தாமோதரன் (அறவேந்தன்), ஆலோசனைக் குழு உறுப்பினர் உ.அலிபாவா உள்ளிட்டோர் விருதை நேரில் வழங்கினர். ‘ஐங்குறுநூறு’, ‘பரிபாடல்’ உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியவர் தட்சிணாமூர்த்தி. ‘அகநானூறு’, ‘நற்றிணை’ போன்ற தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
பாலகுமாரன் இலக்கிய விருது: மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் பெயரில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளருக்கு விருது வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டுக்கான விருது, எழுத்தாளர் வண்ணநிலவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50,000 பண முடிப்பையும் நினைவுப் பரிசையும் உள்ளடக்கியது இந்த விருது.
இன்று (20.05.23) மாலை 5:30 மணி அளவில் சென்னை தி.நகர் வாணி மஹாலில் நடைபெறவுள்ள விழாவில் விருது வழங்கப்படவுள்ளது. நடிகர் டெல்லி கணேஷ், கவிஞர் ரவிசுப்பிரமணியன், பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபால், கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
நா.வானமாமலை நினைவு முகாம்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் குமரி மாவட்டக் கிளையின் சார்பாக நாற்பத்தி மூன்றாவது ஆண்டாகப் பேராசிரியர் நா.வானமாமலை நினைவு கலை இலக்கிய முகாம் கன்னியாகுமரி ஒய்.எம்.சி.ஏ. கட்டிடத்தில் மே 20, 21 (சனி, ஞாயிறு) நாள்களில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் பொன்னீலன், கவிஞர்கள் என்.டிராஜ்குமார், ஜி.எஸ்.தயாளன், எழுத்தாளர்கள் குமார செல்வா, மீரான் மைதீன், அறிஞர்கள் செந்தீ நடராஜன், அ.கா.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.