நூல் வெளி: மர்மமான மனங்களின் கதைகள்

நூல் வெளி: மர்மமான மனங்களின் கதைகள்
Updated on
3 min read

தமிழ் இலக்கியத்தில் மறுமலர்ச்சிக் காலமான தொண்ணூறுகளில் எழுத வந்தவர் ரமேஷ் பிரேதன். பல்வேறு காலகட்டங்களில் அவர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது. ரமேஷின் கதைகள், கைக்கொண்டிருக்கும் மொழி விசேஷமானது; மனவோட்டமாக ஒழுகி ஓடுகிறது.

நினைவேக்கம், பிறழ்வு, அடையாளக் குழப்பம், துக்கம், தற்கொலை, உறவு முரண், பசி, கழிவிரக்கம், கொலை, காமம் எனப் பலதரப்பட்ட மன உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை இந்தத் தொகுப்பு கொண்டுள்ளது. வாழ்க்கை, அரசியல் தத்துவங்களின் 21ஆம் நூற்றாண்டுக் குழப்பத்தையும் இந்தத் தொகுப்பின் சில கதைகள் பேசுகின்றன.

விவரிப்பு மொழியின் வளமும் உணர்ச்சிகளைச் சொல்ல ரமேஷ் உருவாக்கியுள்ள உருவகமும் இந்த நடையைச் சுவாரசியம் மிக்கதாக்குகின்றன. கவிதைத் திராணிகொண்ட சில விவரிப்புகள் கதைப் போக்கில் மிகச் சாதாரணமாகப் புனையப்பட்டுள்ளன. எல்லா கதைகளுக்குள்ளும் தொடரும் மைய உணர்ச்சி, கதைகளை எளிதில் கடக்கவியலாத பாதிப்பை மனத்தில் ஏற்படுத்துகிறது. இந்த அம்சங்கள் கதை களுக்குத் திடகாத்திரமான உடற்கட்டையும் அளித்துள்ளன.

புதுச்சேரியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரை நினைவுபடுத்துவதுபோல் புனையப்பட்டிருக்கும் கதையில், திருவல்லிக்கேணி அச்சுக்கூடச் சித்தரிப்பு வருகிறது. அந்தக் காட்சி விவரிப்பு, மனப்பிறழ்வுக்கு அருகில் வாசகரை அழைத்துச் செல்கிறது. கில்லட்டினைப் போல் இருக்கும் காகிதங்களைத் தறிக்கும் இயந்திரத்தின் கூர்மை பதற்றப்படவைக்கிறது. தண்டனைக் கைதிகளின் தலைகளைத் துண்டாக்கிய இந்தக் கில்லட்டின் சித்தரிப்பு வேறு ஒரு கதையிலும் வருகிறது.

அருகிலிருக்கும் மரப் பட்டறையிலிருந்து உருண்டு வரும் மரச்சுருள், கதைசொல்லியின் மனச் சுழற்சியை உருவகிக்கிறது. புறக் காட்சியை உள்ளுக்குள் ஒரு மனநிலையாகப் பிரதிஷ்டை செய்யும் இந்த அம்சங்களாக, தொகுப்பில் பல கதைகளில் பார்க்க முடிகிறது. இந்தக் கதையில் ஒரு மகனுக்கும் தந்தைக்குமான உறவு முரணை ஒரு நதியாக விவரித்திருக்கிறார் ரமேஷ்.

‘பேய், பாம்பு, போலீஸ்’ கதையில் ஒரு நினைவேக்கம் தொழிற்பட்டிருந்தாலும் இந்த மொத்தக் கதை, உருவாக்கும் ரூபம் தொந்தரவு தரக்கூடியது. லிங்கம் வைக்கப்பட்ட சமாதிக் கோயிலை வீடாக்கிக் கொண்டு கள்ளை மட்டும் உண்ணும் ஒரு குரங்குதான் இதன் மையம். அதன் மெளனமும் சமூகத்தின் கூச்சலும் வேடிக்கை பார்த்தலும் கதைக்குள் எதிரெதிர் முனைகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

அந்தக் குரங்கு பாம்பின் தலையைப் பிடித்தபடியே இருக்கும் காட்சி வருகிறது. இந்தச் சித்திரம் பல நாள்களுக்குத் தொடர்கிறது. குரங்கு அன்னந்தண்ணி இல்லாமல் விடாப்பிடியாக இருக்கிறது. அந்தப் பிடியிலேயே பாம்பு இறக்கிறது; குரங்கும் இறக்கிறது; கதையும் முடிகிறது. ஆனால், இந்த ரூபம் வாசகர் மனதுக்குள் உறைந்துவிடுகிறது.

‘பன்றி’ கதையில் பன்றி பற்றிய விவரிப்பின் வழி, அரசியலைச் சொல்லியுள்ளார். களங்கமில்லா முகங்கொண்ட இந்தப் பன்றிகள், கேள்வி கேட்க நாதியில்லாமல் சித்ரவதைக்கு உள்ளாவதை உருவகமாகச் சொல்கிறார் ரமேஷ். ‘அடைப்பட்டவர்கள்’ கதையில் அமைப்புக்குள்ளிருந்து விடுதலை பெற யத்தனிக்கும் ஒரு மனைவியின் பெரும் படபடப்பு உணர்வுபூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது.

அவளது உள் விருப்பமும் குரூரமான நிதர்சனமும் கதையில் அடுத்தடுத்து இரு துண்டுகளாகக் காட்டப்பட்டுள்ளது. கதையில் பல இடங்களில் விடுதலை பற்றிய சித்தரிப்பு உணர்ச்சியுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கதை விடுதலையை, கடவுளைக் காணும் பரவசம் என்கிறது. இன்னொரு இடத்தில் கடவுளும் அறிவியலும் புனைவுதான் என்கிறது.

தமிழ்ச் சிற்றிலக்கியச் சூழலைக் கிண்டலுக்கு உள்படுத்தும் விவரிப்புடன் தொடங்கும் ‘பயம்’, அடையாளச் சிக்கலைப் பேசுகிறது. மத, இன, மொழி அடையாளம் எல்லாம் இந்தக் கதைக்குள் விவாதிக்கப்பட்டுள்ளன. ‘கூத்தாண்டவ’ரில் பால் நிலை குறித்த அடையாளச் சிக்கல் வருகிறது. ஆனால், அது கதையைக் கடந்து செல்கிறது. சமூக ஒழுக்கங்களுக்கு இடையில் அல்லாடும் மனிதர்களின் குற்ற உணர்வுகளையும் இந்தக் கதை திருத்தமாகச் சித்தரித்துள்ளது. ‘வியாசகுல’த்தில் ஒருவனது பிறப்பே கேள்விக்கு உள்ளாகிறது.

‘பரமசிவம்’, சமூக ஒழுக்கத்தை விலக்கிய உறவுகள் பலவற்றைப் பேசுகிறது. இந்தக் கதை முழுவதுமாகத் தற்கொலைகளைப் பற்றிப் பேசுகிறது. இது, மரணத்தையும் காமத்தையும் ஒரே இடத்தில் நிறுத்திப் பார்க்கிறது. இந்தத் தொகுப்பில் தற்கொலை விவரிப்புகள் பல இடங்களில் பரவலாகத் தென்படுகின்றன. ‘இருவ’ரில் தற்கொலை, அதற்கு முந்தைய கணத்தில் தெருவில் வீசப்படுகிறது.

ஒரு நாவலுக்குரிய வியாபகத்துடன் சொல்லப்பட்டுள்ள ‘பரமபத பாதைகள்’ கதைக்குள்ளும், ஒரு நாவல் இருக்கிறது. மனித உறுப்பு வணிகம் சட்டமாக்கப்பட்ட காலத்தில் கதை நிகழ்கிறது. எழுத்தாளர்கள் இருவர் இந்தக் கதைக்குள் இருக்கிறார்கள். தன் உடல் உறுப்புகளை விற்றுவிட்டு, அதைத் தராமல் வழக்குத் தொடரும் ஒரு எழுத்தாளன், பெரிய அரண்மனை போன்ற பழைய வீட்டைப் பூட்டிவைத்து நாவல் எழுதுகிறான். அந்த நாவல் எழுதப்பட்ட, பதிப்பித்த கதைகளைத் தாண்டி, நாவலுக்குள் கதை நுழையும்போது ஒரு துப்பறியும் நாவலுக்கு உரிய விறுவிறுப்பு கூடிவிடுகிறது.

ஒருவேளை இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். ஒரு பழமையான மகப்பேறு மருத்துவமனைச் செவிலியர் மூவர், பிறக்கும் குழந்தைகளைத் தாய்மாரிடம் மாற்றிவைப்பதை ஒரு விளையாட்டாக வெகுகாலமாக விளையாடுகிறார்கள். இந்த விளையாட்டின் வழி சமூக பேதத்தைக் கதை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இக்கதைகளின் ஒரு முடிவாக வேளாங்கண்ணிக் கரையில் தலைக்கு மேல் இதுவரை இல்லாத ஒரு வெட்ட வெளியை ‘துறவி’ கதை காண்பித்துத் தருகிறது.

ரமேஷின் இந்தக் கதைகளில் புதுச்சேரி என்கிற நிலமும் அதன் பிரெஞ்சுப் பண்பாட்டுத் தாக்கமும் தெளிவாக வெளிப்பட்டுள்ளன. மாறிவிட்ட அந்த நிலத்தைப் பற்றிய பிடிப்பை ரமேஷ் பிரயாசையுடன் சொல்லியிருக்கிறார். மனிதர்கள் மர்மமானவர்கள் என்கிற விவரிப்பு இந்த நூலின் ஒரு இடத்தில் வருகிறது. அந்த மர்மமான மனத்தின் விநோதமான சஞ்சாரமாக இந்தக் கதைகளைப் பார்க்கலாம்.

ஆனால், கதைகள் மனத்தின் அகவெளிக்குள் மட்டும் ஒடுங்கிவிடவில்லை. பிரச்சினைக்குரிய ஒரு சமூகமும் அதன் அத்தனை இயல்புகளுடனும் இதில் உள்ளது. ரமேஷின் கதைகள், அந்தச் சமூகத்துடன் குறுக்கீட்டையும் நிகழ்த்துகின்றன. இந்த எல்லாப் பண்புகளாலும் ரமேஷ் பிரேதனின் இந்தத் தொகுப்பு, வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று எனத் தைரியமாக முன்மொழியலாம்.

ரமேஷ் பிரேதன் சிறுகதைகள்
ரமேஷ் பிரேதன் மூலிகை பதிப்பகம், புதுச்சேரி
விலை: ரூ.340
தொடர்புக்கு: 8608610563

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in