நூல் வெளி: மாயமும் யதார்த்தமும்

நூல் வெளி: மாயமும் யதார்த்தமும்
Updated on
2 min read

குமரி மாவட்டம் என்றவுடன் டவுன், ஃபோர் ரூட், கல்குளம், விளவங்கோடு, கடப்புரம் என எல்லாவற்றையும் ‘நாஞ்சில்’ என ஒரே கட்டாகக் கட்டிச் சாக்கில் போட்டுவிடுவார்கள். யதார்த்தத்தில் இதற்குள்ளும் வேறுபட்ட வாழ்க்கையும் பண்பாடுகளும் இருக்கின்றன. கன்னியாகுமரி மேற்குப் பகுதியின் தனித்துவமான வாழ்க்கையை நட.சிவகுமார் ‘பஞ்சவர்ண குகை’ கதைத் தொகுப்பில் பதிவுசெய்துள்ளார்.

சலவைத் தொழில் சார்ந்த மக்களின் வாழ்க்கையை இந்தத் தொகுப்பு பேசுகிறது. அவர்களின் கொண்டாட்டம், வாழ்க்கைப் பிரச்சினைகள், நம்பிக்கைகள், தொன்மங்கள் எனப் பல அம்சங்கள் யதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளன. அடித்தட்டு மக்களின் வாழ்க்கை என்றதும் உப்பையும் புளியையும் சிவகுமார் கூட்டிவிடவில்லை. சலவைச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தெய்வ வாகனத்தை தூக்குவது பற்றிய ‘கேரளபுரம்’ கதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஆண்-பெண் நிலைகளுக்குள் இருக்கும் ஈர்ப்பே கதையின் மேற்பரப்பு. ஆனால், அதற்குள் சாதிப் படிநிலையின் யதார்த்தம் சித்தரிக்கப்பட்டுள்ளது. சமூக நிலையில் பின்தள்ளப்பட்ட மக்கள் ‘திருச்சடி’க்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் விளையாட்டுத்தனம் மிக்க மொழியில் சிவகுமார் சொல்லியிருக்கிறார். இதே போல் ‘இராமமூர்த்தி சித்தப்பா’, ‘எங்க அப்பாவுக்கு நாலு பிள்ளைகளும் இருந்தது’ ஆகிய கதைகளும் சிவகுமார் அனுபவத்தின் விளைச்சல் எனலாம்.

இந்த வகையில் ‘அரிஷ்டம்’ வாசிப்புச் சுவாரசியம் அளிக்கும் கதை. இந்தக் கதையை ஆவணத்தன்மையுடன் சிவகுமார் எழுதியுள்ளார். அரிஷ்டம் என்றால் - புழங்குமொழியில் - உள்ளூர்த் தயாரிப்பு மது. இந்த அரிஷ்டக் கடைகளின் செல்வாக்கும் அது ஒரு வாழ்வாதாரமாக, பண்பாடாக இருந்ததையும் சிவகுமார் விவரிக்கிறார். வெளியிலிருந்து இந்தக் கதையைச் சொல்லும் அவர், சட்டெனக் கதைக்குள் இறங்கி அந்தக் கடையையே நடத்தத் தொடங்கிவிடுகிறார்.

பேரீச்சம் பழம், சிறுநாவல் பூ, அதிமதுரம், கருப்பட்டி எனப் பலவற்றையும் கொதிக்கவைத்துப் பானையில் கட்டிக் கடற்கரையில் புதைத்துத் தயாரிக்கும் அதன் முறையைச் சுவாரசியத்துடன் விவரித்திருக்கிறார். இந்தக் கடைகள் மறைந்துபோனதைக் குறித்த தன் ஆதங்கத்தையும் ஒரு எழுத்தாளராக மாலை நேர இலக்கியக் கூட்டம் முடிந்ததற்குப் பின் நடக்கும் கூடுகையில் சொல்வதுபோல் சொல்கிறார்.

நட.சிவகுமார்
நட.சிவகுமார்

தக்கலை சேது தியேட்டர் இதே போல தொகுப்பில் இரு இடங்களில் நினைவேக்கமாக வருகிறது. முளகுமூடு, திருக்கணங்கோடு, மேட்டுக்கடை, தெங்கன்குழி, மார்த்தாண்டம் என இன்று அழைக்கப்படும் தொடுவெட்டு என அப்பகுதியின் பெயர்களும் ப்ரியத்துடன் கதைகளில் உச்சரிக்கப்பட்டுள்ளன. இவை வாசிப்புக்கு நெருக்கத்தை அளிக்கின்றன.

மலையாள மண்ணுக்கு உரிய மாந்திரீகம் இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகளின் ஆதாரம். ‘உதிரம் குடிக்கும் அழகியின் அந்தரங்கப் பல்’லில் ஒன்பது பிராமணர்களின் உதிரச் சுவை பார்த்த அழகி வருகிறாள். ராஜா காலத்துக் கதை இது. அவர் நம்பூதிரிகளை அழைத்து அழகியைக் கட்டப் பார்க்கிறார். அழகி, நீலியான கதையும் இடையே சொல்லப்பட்டுள்ளது.

இதே போன்ற ஒரு அழகி ‘பஞ்சவர்ண குகை’ கதையிலும் வருகிறாள். ஆனால், அவள் நீலி அல்ல; மாயக்காரி. அவளது கதை, மேலாங்கோடுச் சகோதரிகளை நினைவுபடுத்துகிறது. சலவைத் தொழிலாளி சத்தம்போட, குளிக்க வந்த அதிசக்தி கொண்ட ஆத்துக்கடவு அம்மையே பணிந்து அவனுக்கு வழிமாற்றிக் கொடுத்த கதையையும் சிவகுமார் சொல்கிறார்.

பிடிக்காதவர்கள் வீட்டில் துர்மரணம் நடப்பதற்காக கூடோத்ரம் (சூன்யம்) செய்ய முயலும் ஒருவனின் கதை இந்தத் தொகுப்பில் உண்டு. அதற்காகக் காக்கையை எரித்த பஸ்மம் (சாம்பல் திருநீறு) வேண்டும் எனக் காக்கையைத் தேடிப் பிடிக்கிறான். பிறகு, காக்கைகள் அவனைத் தேடித் தொடர்கின்றன. முதல் கதையில் வரும் உக்கிலு (செம்போத்து) பஸ்மமும் சித்தரிப்பும் கவனிக்கத்தக்கது. இம்மாதிரி மாந்திரீகத்தின் நுட்பங்கள் பல கதைகளில் திருத்தமாக விவரிக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே, இருக்கும் தொன்மக் கதைகள் போக, சிவகுமாரும் தன் கற்பனை மாயாஜாலக் கதைகளையும் இதற்குள் இறக்கிவிட்டிருக்கிறார். மிஸ்டர் இஸ்திரிப்பெட்டி, அலுமினியத் தட்டில் அரிசி போன்ற கதைகளில் இது வெளிப்பட்டுள்ளது. இந்தக் கதைகள், பசி என்ற ஒன்றை இல்லாமல் செய்வதற்கான தேடல்களாக விரிகின்றன. இதற்காகப் புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்படுகின்றன. கார்ப்பரேட் அரசியலையும் இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன.

நட.சிவகுமார் கதைகளின் முடிவு யாவும் பழக்கப்பட்ட வடிவ லட்சணங்களிலிருந்து விலகியவை. இதை உத்தியாக அவர் கைக்கொண்டிருக்கலாம். ஆனால், ஒரு வாசக முழுமையை இந்தப் பண்பு அளிக்கவில்லை. இந்தக் கதைகளில், திடமான கதைசொல்லி இருக்கிறார்.

அவர் பெரும் பிரயத்தனங்கள் இன்றி எளிமையாகக் கதைகளைச் சொல்லிப் போகிறார். நட.சிவகுமார் என்கிற எழுத்தாளரே சில கதைகளுக்குள் வருகிறார். இது கதையைத் தொடர்புபடுத்திக்கொள்ள உதவுகிறது. விவரிப்பு மொழியைத் திருக்காமல் கல்குளம் வழக்கிலேயே நகர்த்திச்செல்கிறார். அதுபோல் வட்டார வழக்குகள் திணிப்பின்றி, இயல்பான ஓட்டத்தில் கலந்துள்ளன. இந்த அம்சங்கள் இந்தத் தொகுப்பைக் கவனம் மிக்கதாக்குகின்றன.

பஞ்சவர்ண குகை
நட.சிவகுமார்
நாதன் பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 9884060274
பஞ்சவர்ண குகை
நட.சிவகுமார்

நாதன் பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 9884060274

- தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in