

இஸ்ரேல் எழுத்தாளர் எட்கர் கீரத், ‘மிஸ்ஸிங் கிஸ்ஸிங்கர்’ என்னும் கதைத் தொகுப்பின் வழி பரவலாக அறியப்பட்டவர். ஹீப்ரு மொழியில் எழுதிவருகிறார். இவரது பெரும்பாலான கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சமகாலச் சமூகச் சூழலால் தனிமனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வது இவரது விசேஷமான அம்சம். இவரது ‘Fly, Already’ தொகுப்பு, ‘பறந்துபோய்விட்டான்’ என்னும் தலைப்பில் செங்கதிரின் சரளம்மிக்க மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது.
தலைப்புக் கதை, ஒரு சிறுவனின் பார்வையிலிருந்து தொடங்கி அவனது தந்தையிடம் கைமாறுகிறது. ஒருவன் மாடியிலிருந்து பறக்க உத்தேசிக்கிறான். சிறுவன் பிகேக்கு அதைப் பார்த்ததும் உற்சாகம். உண்மையில், அவன் மாடியிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோவைப் போல் கைகளை விரித்துப் பறக்க இருப்பதாக பிகே நினைக்கிறான். ஆனால், பிகேயின் தந்தை அதைப் பார்த்ததும் பதற்றமாகிவிடுகிறார்.
அவனைக் குதிக்கவிடாமல் தடுக்கப் பல பிரயத்தனங்கள் செய்கிறார். ஆனால், அந்த மனிதன் பறக்கும் அரிய காட்சியை அப்பா பார்க்கவிடாமல் செய்துவிடுவாரோ என்று பிகேவுக்குக் கவலை. வாழ்வதற்கும் செத்துப் போவதற்கும் இடையில் ஒரு நீர்க்குமிழியைப் போல் மிதக்கும் வாழ்க்கையை எட்கர் இதில் சித்தரித்துள்ளார். தன் காதலியைக் கவர்வதற்காக அவளுக்குப் பிடித்த போதைப் பொருளைத் தேடிச் செல்லும் ஒரு காதலனின் கதை ‘ஒரு கிராம் தேவை’.
இந்தக் கதையின் விரிவு, நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது. பார், சாலை, வழக்கறிஞர் வீடு, நீதிமன்றம் எனப் பல இடங்களில் கதை நடக்கிறது. தனிமனித உணர்ச்சி, சட்டப் புத்தகத்தையும் தாண்டி, நீதிமன்றத் தீர்ப்புகளில் செலுத்துகிற செல்வாக்கை இந்தக் கதை, போகிற போக்கில் சொல்கிறது. கதையில் எல்லாம் கைகூடிவரும்போதும் அது முடிவதாக இல்லை. அதை வாசகர்கள் திறந்து பார்ப்பதற்காக எட்கர் மூடிவைத்திருக்கிறார்.
நவீனத் தொழில்நுட்ப மாற்றத்தால் நம் வாழ்க்கை இப்போது பட்டுக்கொண்டிருக்கும்/இனி படப்போகும் பாட்டை ‘சாளரம்’ கதை விவரிக்கிறது. ‘ஒவ்வாமை’, குழந்தைகளுக்குப் பதிலாக நாய்க்குட்டியை வளர்க்கும் தம்பதியின் மன அவஸ்தையைப் பேசுகிறது. கணவன் - மனைவி உறவுக்குள்ளிருக்கும் முரண்களை அது முற்றுவதற்கு முன் அருகில் சென்று இந்தக் கதை பார்க்கிறது. அவள் மீதான அன்பையும் சேர்த்து அவளுக்குப் பிடித்துப்போய்விட்ட நாய்க்குட்டி மீது காட்டுகிறான்.
குழந்தைகளின் குற்றமும் களங்கமின்மையும் ஒருங்கே அமைந்த அந்த நாய்க்குட்டியோ அக்கம்பக்கத்தில், சாலைகளில் ஒருவரையும் விடுவதாக இல்லை. வீடு வீடாக மாறுகிறார்கள். ஒவ்வாமை நோயும் குட்டிக்கு வருகிறது. நாயால் உள்ளும் புறமுமாக மாறும் அவர்களது வாழ்க்கையைக் காண்பித்து, ஒரு தேய்வழக்குக் காட்சியில் கதையை எட்கர் முடிக்கிறார்.
எட்கரின் கதைகளின் மொழி, எளிமையிலும் எளிமை. உவமை விவரிப்புகள் இல்லை. காட்சி மொழி என இதை வரையறுக்கலாம். சமகாலத்தின் நம் அடவுகளை, பகடி செய்யும் காட்சிகளும் எள்ளல்தன்மையும் இக்கதைகளில் மிகுந்திருக்கின்றன. அவை கதைகளை முன்னோக்கிச் செலுத்த உதவுகின்றன. இந்தப் பண்புகள், வாசித்துப் பார்க்க வேண்டிய முக்கியத்துவத்தை இந்தக் கதைகளுக்கு அளிக்கின்றன.
பறந்துபோய்விட்டான்
எட்கர் கீரத் (தமிழில்: செங்கதிர்)
நூல் வனம் வெளியீடு
விலை: ரூ.230
தொடர்புக்கு: 9176549991