

பெரியாருக்கு எதிராகப் பலரால் முன்வைக்கப்பட்ட அவதூறுகளுக்குப் பதிலாக ஊடகவியலாளர் ப.திருமாவேலன் இரு தொகுதிகளாக எழுதியுள்ள நூல், ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ (2021). ‘குடியரசு’, ‘விடுதலை’ ஆகிய இதழ்களில் வெளிவந்த பெரியாரின் எழுத்துக்களையே ‘அவர் தமிழர்’ என்பதற்கான தரவுகளாக நிறுத்தியிருக்கிறார்.
நூறு ஆண்டுகளின் சமூக வரலாற்று ஆவணமாகவும் இந்நூல் விளங்குகிறது. இந்த முக்கிய ஆக்கத்துக்குப் பெருமை சேர்க்கும்விதமாக, மாநிலக் கல்லூரி முதல்வரும் எழுத்தாளருமான கல்யாணராமனும் அக்கல்லூரித் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் சீதாபதி ரகுவும் இணைந்து இந்நூல் குறித்து ‘பெரியார்: அவர் ஏன் பெரியார்?’ என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க முப்பத்தோரு ஆய்வாளர்கள் இந்நூல் குறித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.
தொடர்ச்சியாகத் திராவிட இயக்க ஆய்வில் ஈடுபட்டு வரும் திருமாவேலனின் பெரியார் குறித்த பங்களிப்புகளை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டு பேரா.வீ.அரசு எழுதியுள்ளார். பெரியார், ஒருபோதும் தம் கருத்தைப் பிறர் மீது திணிக்காதவர்; தமிழருக்கு எதிராக அவர் ஒருநாளும் செயல்பட்டதில்லை என்ற கருத்தை முதன்மைப்படுத்துகிறது டி.அருள் எழிலனின் கட்டுரை. வ.உ.சிதம்பரனாருக்கும் பெரியாருக்கும் இருந்த உறவை திருமாவேலன் எவ்வாறு அணுகியிருக்கிறார் என்ற கோணத்தில் துரை.
இலட்சுமிபதியின் கட்டுரை அமைந்துள்ளது. பெரியாருடன் இணைந்து பயணித்த மறைமலையடிகள், திரு.வி.க., சோமசுந்தர பாரதி, பாரதிதாசன் உள்ளிட்ட பத்து ஆளுமைகளுக்கும் பெரியாருக்குமான கதையாடல்களை மட்டும் எடுத்துக்கொண்டு, கல்யாணராமன் விரிவாக எழுதியிருக்கிறார். இவ்வாறு ஒவ்வொரு கட்டுரையும் கூடுதல் பார்வைகளுடன் மூலநூலை மேலும் செழுமைப்படுத்தியுள்ளன.
பெரியாரைத் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவராகக் கட்டமைத்த ம.பொ.சிவஞானம், குணா, பெ.மணியரசன் உள்ளிட்டோருக்கான பதில்களாகப் பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். பெரியாரின் மொழிப்பிரக்ஞை குறித்த கட்டுரைகளும் தமிழ்த்தேசியம் குறித்த கட்டுரைகளும் தொகுப்பில் கூடுதல் இடத்தைப் பிடித்துள்ளன.
திருக்குறளின் பெருமையை உணர்த்தி, ‘திருவள்ளுவ மாலை’ என்றொரு நூல் இயற்றப்பட்டுள்ளதை அனைவரும் அறிவர். இந்நூலில் ஐம்பத்தைந்து புலவர்கள் திருக்குறளின் பெருமையை வெண்பாக்களாகப் பாடியுள்ளனர். அப்படித்தான் ‘பெரியார்: அவர் ஏன் பெரியார்?’ என்ற நூலையும் பார்க்கிறேன்.
அவ்வகையில், ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ என்ற நூலைக் குறுக்குவெட்டாகப் புரிந்துகொள்ளவும் பெரியார் மீது வைக்கப்பட்ட அவதூறுகளின் பின்னணியை விளங்கிக்கொள்ளவும் இந்நூல் உதவும். மேலும், பெரியார் மீது வைக்கப்படுகிற விமர்சனங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்திக் கட்டுரையாளர்கள் கட்டுரைகளை எழுதியுள்ளனர்.
இவர்கள் மார்க்சியம், கம்யூனிஸம், பெண்ணியம், தலித்தியம், நவீனத்துவம், தமிழியம், கல்விப்புலம் போன்ற பல்வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சார்ந்தவர்கள். இப்படிப் பல்வேறு தரப்பினரையும் தமிழுக்காக ஒன்றிணைப்பதுதான் பெரியாரின் பேராளுமை என்பதை இந்நூல்வழி உணர முடிகிறது.
பெரியாரின் அரசியல்மீதும் அவரது கலை இலக்கியப் புரிதல்மீதும் மாற்றுப்பார்வை கொண்டுள்ள எழுத்தாளர் சு.வேணுகோபால்கூடத் தமிழர்களுக்காகப் பெரியாரைவிட உண்மையாகப் பாடுபட்டவர் யாரும் இல்லை என்ற நேர்நிலை முடிவையே வந்தடையும் இடம் இந்த நூலில் சிறப்பாகப் பதிவாகியுள்ளது.
பெரியார்: அவர் ஏன் பெரியார்?
தொகுப்பாசிரியர்கள்: கல்யாணராமன்,
சீதாபதி ரகு
விப்ராஸ் பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 95858 69999