கணினித் தமிழ் நூல்

கணினித் தமிழ் நூல்
Updated on
2 min read

1995 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில், ‘தமிழ்க் கம்ப்யூட்டர்’ எனும் மாத இதழில், சி எனும் நிரலாக்க மொழி குறித்து மு.சிவலிங்கம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கணினி அறிவியல் குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்த நூல்களே கற்பதற்குச் சிரமமாக இருக்கும் சூழலில், சி குறித்த இந்நூலை மு.சிவலிங்கம் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக எழுதியிருக்கிறார்.

கணினி அறிவியல் உள்பட எந்தவொரு நவீனத் தொழில்நுட்பத்தையும் கற்பிக்கும் தகுதியும் திறனும் கொண்டது தமிழ்மொழி என்பதற்குச் சான்றாகவும் இந்நூல் அமைந்துள்ளது. கட்டுரைகள் தொடராக வெளிவந்த காலத்திலேயே பெரும் வரவேற்பைப் பெற்றன. தமிழிலும், கணினி அறிவியலிலும் நூலாசிரியர் கொண்டிருக்கும் ஆளுமையை இந்தக் கட்டுரைகள் பறைசாற்றுகின்றன. - ஹுசைன்

மொழிகளின் அரசி C++
மு.சிவலிங்கம்

பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.500
தொடர்புக்கு: 87780 73949

ஒரு புதிய யுகத்தின் கதை: புகழ்பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளர் அமிதாவ் கோஷின் குறுநாவல் ‘The Living Mountain’ சென்ற ஆண்டு வெளிவந்தது. இந்நூலின் மொழிபெயர்ப்பு ‘வாழும் மாமலை’. ‘Anthropocene’ என்னும் ஒற்றைச் சொல்லை உந்துதலாகக் கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு சொல்லில் வரப்போகும் ஒரு புதிய யுகத்தை அமிதாவ் உருவாக்கியிருக்கிறார். அந்த யுகத்தின் நிலம்தான் இந்த மாமலை.

சமகால விவரிப்பில் தொடங்கி கனவைப் போன்ற ஒரு காலகட்டத்தின் மேல் கதை மிதக்கிறது. இந்தக் கதை வேறொரு கதையைச் சொல்கிறது. அது ஒரு மாதிரிக் காலம், அதன் மக்கள்தான் அந்தக் கதையின் கதாபாத்திரங்கள். மனித இனம் புவியை, காற்றை, வெளியைச் சிதைத்த கதை அது. புறவயமாகவும் அகவயமாகவும் இந்தச் சிதைப்பு சித்தரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர் உலகம் முழுவதும் பயணித்துத் தங்களுக்குத் தேவையான பொருள்களை அள்ளிச் சென்ற கதை, இதன் ஓட்டத்தில் நினைவுக்கு வருகிறது.

செல்வத்தைக் கொள்ளையடிக்கப் புறப்பட்ட அந்தரோபோயைப் போலவே வர்வரவோயினரும் தெய்வமென்று கருதிய மலைமேல் ஏறும்போது ஐரோப்பியர்களுக்கு எதிரான கலக வெற்றிக்குப் பிறகு ஐரோப்பியர்களின் இடத்தை மூன்றாம் உலக நாட்டுப் பிரஜைகள் எடுத்துக்கொண்ட அரசியல் மாற்றமும் நினைவுக்கு வருகிறது. வர்வரவோயினரின் புதிய மாற்றத்தால் சொந்த மக்கள் மாண்டு போகின்றனர். ரகசியங்களை உள்ளடக்கிய மகாபர்வதத்தின் மீதான பயமும் பக்தியும் அந்தரோபோய் அதில் ஏறிய பிறகு நீங்கிவிடுகிறது. ஒரு கட்டத்தில் வர்வரவோயினர், அந்தரோபோய் ஆகிவிடுகிறார்கள்.

தொன்மத்தின் மீதான நம்பிக்கைகள், பொருளாதார நலன்களுக்கான வேட்டையில் நினைவிலிருந்தே பறிபோய்விடுவதை நாவல் இப்படிச் சித்தரிக்கிறது: ‘எங்கள் முந்தைய கதைகளை, பாடல்களை, ஆட்டத்தை மறந்துவிட்டதை உணர்ந்து திகைத்தோம். நாங்களும் அவை அபத்தமானவை, கற்பனையானவை, அந்தரோயுகத்தில் அவற்றுக்கு இடமில்லை என்று நம்பத் தொடங்கிவிட்டோம்’. இந்தத் தொன்மக் கதையெல்லாம் மூடநம்பிக்கையானது என்று சொன்ன அந்தரோபோயினரே அதைத் தேடி வருகிறார்கள்.

உணர்ச்சி மிகுந்த பல காட்சிகளைக் கொண்ட இந்த நாவலை, அவல நகைச்சுவைத் தெறிப்புடன் அமிதாவ் எழுதியிருக்கிறார். கண்ணன், இதைத் தங்குதடையற்ற மொழியில் தமிழுக்கு அளித்துள்ளார். எளிமையான சொற்களில் கூர்மையான விவரிப் பையும் நாவல் கொண்டுள்ளது. புதுமையும் சொல்மொழியில் நுட்பமும் கொண்ட இந்தக் கதையின் மொழிபெயர்ப்பு தமிழ்ச் சமகாலக் கதையாளர்களுக்குப் புதிய வாசல்களைத் திறந்துவைக்கக்கூடும். - ஜெய்

வாழும் மாமலை
அமிதாவ் கோஷ்

(தமிழில்: கண்ணன்)
காலச்சுவடு
விலை: 100
தொடர்புக்கு: 04652 278525

காட்சி ரூபங்கொள்ளும் கவிதைகள்: கணந்தோறும் நம்மைச் சுற்றி கவிதைகள் நிகழ்ந்தாலும், கவிதைக் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கே கவிதை வசப்படும் என்பதற்கேற்ப, தன்னைச் சுற்றி நிகழும் சமூக நடப்புகளுக்குள்ளிருந்து துளிர்க்கும் சிறு சிறு சம்பவங்களையும் கவிதைகள் ஆக்கியிருக்கிறார் பா.சந்துரு.

சமூக முன்னேற்றத்திற்கு அச்சாணியாக விளங்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் என எளிமையான மனிதர்களைக் கவிதைகளால் கவனப்படுத்தியுள்ளார். ‘கற்பூர தீபமில்லை / கண்ணெதிரே கடவுளில்லை / ஜெபிக்கின்ற வார்த்தையில்லை / பூசிக்கொள்ள திருநீறும் இல்லை / ஆனால் /

நூலக ஆலயத்தில் / புத்தக ஆண்டவன் பல உண்டு’ என்று நூலகத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டுள்ள கவிதையின் முடிப்பில், ‘நூலகத்தில்கூட தூங்குபவர்களும் உண்டு’ என்று முடித்திருப்பது யதார்த்தமாக உள்ளது. சுவரொட்டிகள், சிரிப்பு, சுடுகாடு, ஒருவனின் காதல் தினம் ஆகிய கவிதைகள் கவிஞருக்கு கவிதை மொழி கைகூடியுள்ளதற்கான சாட்சி. - மு.முருகேஷ்

துயிலான்
பா.சந்துரு

தமிழ் அலை வெளியீடு
விலை: ரூ.175
தொடர்புக்கு: 7708597419

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in