நூல் நயம்: அனுபவமும் ஆய்வும்

நூல் நயம்: அனுபவமும் ஆய்வும்
Updated on
2 min read

கரிசல் எழுத்தின் பிதாமகன் எனக் கொண்டாடப்படும் கி.ராஜநாராயணனின் நூற்றாண்டையொட்டி இருபெரும் தொகுதிகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன். கி.ரா.வின் சமகால எழுத்தாளர்கள் தொடங்கி தற்கால எழுத்தாளர்கள், கவிஞர்கள், அரசியலாளர்கள், பிறமொழி இலக்கியவாதிகள், பதிப்பாளர்கள் எனப் பலதரப்பினரும் இதில் பங்களித்திருக்கிறார்கள்.

சிலர் கி.ரா.வுக்கும் தங்களுக்குமான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள, சிலர் கி.ரா.வின் படைப்புகள் குறித்து எழுதியுள்ளனர். சிலர் அறியப்படாத முக்கிய நிகழ்வுகளையும் பகுப்பாய்வையும் முன்வைத்துள்ளனர். கி.ரா. குறித்து ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டுரைகள், கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

கி.ரா.வின் வாசகர்கள் சிலரிடமும் கட்டுரைகள் கேட்டுப் பெற்றிருப்பது பாராட்டுக்குரியது. கட்டுரையாளர்கள் பற்றிய ஒருவரிக் குறிப்பைத் தந்திருப்பதும் கட்டுரைகள் - கடிதங்கள் எழுதப்பட்ட ஆண்டைக் குறிப்பிட்டிருப்பதும் அவற்றை அந்தந்தக் காலத்துடன் பொருத்திப் பார்க்க உதவியாக இருக்கிறது.

‘கோபல்ல கிராமம்’, ‘கதவு’, ‘பிஞ்சுகள்’, ‘நாற்காலி’, ‘கரிசக் காட்டுக் கடுதாசி’, ‘பாலியல் கதைகள்’ உள்ளிட்ட பல படைப்புகளைப் பற்றிக் கட்டுரையாளர்கள் குறிப்பிட்டு எழுதியுள்ளனர். குறிப்பாக ‘அண்டரண்ட பட்சி’. கி.ரா.வின் கதைகள், கதை மாந்தர்கள் - அவர்களது தனித்துவக் குணங்கள், கதைசொல்லும் பாணியும் துலக்கமான வர்ணனையும், கதைகளுக்கு நடுவே ஊடாடும் நகைச்சுவை, கிராமத்துச் சொலவடைகள், அவர் தொகுத்த வட்டார வழக்குச் சொல்லகராதி, பங்கெடுத்த விவசாயப் போராட்டங்கள் போன்றவற்றையும் கவனப்படுத்தியுள்ளனர்.

இறுதி மூச்சு விடைபெறுகிற நேரத்தில்கூட கி.ரா.வின் கேலியும் சிரிப்பும் மறையவில்லை என்று கிருஷி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளதைப் படிக்கிறபோது அவர் எழுதிய கதைகளுக்கும் அவருக்கும் இடைவெளி அதிகமில்லை எனத் தோன்றுகிறது. பெண்ணுரிமை என்னும் சொல்லாக்கம் அவரது எழுத்தில் காணப்படவில்லை என்றாலும் அதன் உள்ளடக்கம் மிக இயல்பாக அவரது கதைகளில் ஊடாடிக்கொண்டிருக்கும் என கே.சாந்தகுமாரி குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் ஊரில் ரூட் பஸ் நிற்காததால் அந்த ஊரின் மனிதர்கள் படும் அவஸ்தையைப் பற்றிய செய்தியை வைத்துக்கொண்டு என்றாவது தீர்வு வரட்டுமென அதற்குக் கலைத்தன்மையை ஏற்றி அதை ‘அவத்தொழிலாளர்கள்’ என்னும் கதையாக 1965இல் கி.ரா. எழுதியதை ரவிசுப்பிரமணியன் நினைவுகூர்கிறார். மக்களுக்காக மக்களின் கதையை எழுதியதால்தான் ஆண்டுகள் பல கடந்தும் கி.ரா.வின் படைப்புகள் நிலைத்து நிற்கின்றன என்கிற உண்மைக்கு இந்த இரண்டு தொகுதிகளும் வலுச்சேர்க்கின்றன. - பிருந்தா

கி.ரா. நூறு
(இரண்டு தொகுதிகள்)

தொகுப்பு: வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்
புஸ்தகா டிஜிட்டல் மீடியா
பிரைவேட் லிமிடெட்
விலை: தொகுதி 1: ரூ. 870, தொகுதி 2: ரூ.920
தொடர்புக்கு: 7418555884

ஒரு நூற்றாண்டு கால ஆய்வு: நம் வரலாற்றுக்குச் சான்றாகப் பழந்தமிழ்க் கவிதைகள் உள்ளன. அன்றைக்கு செய்யுளே பதிவுக்கான வடிவமாக இருந்தது. இன்றைக்கு வரலாறு பலவிதங்களில் பதிவுசெய்யப்படும் வாய்ப்பு உள்ளது. இன்று கவிதை எப்படித் தன் சமகாலத்தைப் பதிவுசெய்கிறது என்பது ஆய்வுக்குரிய பொருள்.

இந்தப் பொருளில் அமைந்த ஆய்வு என வீரபாண்டியனின் ‘இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்' நூலைக் குறிப்பிடலாம். 1901 – 2000 இடையிலான ஒரு நூற்றாண்டுக் காலத்தை ஆய்வுக்கான காலமாக ஆசிரியர் தேர்ந்துள்ளார். இந்த ஆய்வுக்காக அவர் கவிஞர்கள் 25பேரின் கவிதைகளை எடுத்துக்கொண்டுள்ளார்.

கவிமணி தேசிக விநாயகத்தில் தொடங்கி அறிவுமதி வரை தமிழின் முக்கியமான கவிஞர்கள் இவர்களில் அடக்கம். மீரா, கந்தர்வன், தமிழ்ஒளி, தணிகைச்செல்வன், இன்குலாப் போன்றவர்களின் வரிசையில் ஞானக்கூத்தன் என்கிற பெயரும் இடம்பெற்றுள்ளது கவனிக்கத் தகுந்தது. இந்தக் கவிஞர்களின் கவிதைகள் சமகாலச் சமூக, அரசியல், போராட்ட, வன்முறை, இயற்கை நிகழ்வுகளை எப்படிச் செய்துள்ளன என ஆராய்ந்துள்ளார். ‘செண்பகராமன் பள்ளு’ நூலை குஜிலிக் கவிதைகள் என நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்தக் குஜிலிக் கவிதைகள் பிரிட்டிஷ் இந்தியக் காலத்து கோயில் நுழைவுப் போராட்டம், மெட்ராஸ் ரயில் கலகம் ஆகிய சம்பவங்களைப் பதிவுசெய்ததை நூல் உரைக்கிறது. மேலும் மயிலாப்பூர் தேர்ச் சக்கரத்தில் சிக்கிச் சிறுவர் உயிரிழந்த நிகழ்வையும் இந்த குஜிலிக் கவிதைகள் பதிவுசெய்துள்ளன. குவெல்லா நிலநடுக்கம் குறித்துப் பாவேந்தர் எழுதியதையும் கவிதைகள் சுட்டுகின்றன.

அதுபோல், சீனப் போரால் இந்தியர்கள் ஒற்றுமைப்பட்டதாக மீரா எழுதிய கவிதையையும் நூல் கவனத்துடன் பதிவுசெய்துள்ளது. ‘மருந்துக்குக்கூட/மனிதம் இல்லை’ என நவகாளி யாத்திரை குறித்த சிற்பியின் கவிதையைப் பதிவுசெய்துள்ளார் ஆசிரியர். தமிழ்நாட்டின் முதல் மே தினக் கொண்டாட்டத்தைப் பற்றிய தணிகைச்செல்வனின் கவிதை, தனித் தமிழ் இயக்க எழுச்சி பற்றிய பெருஞ்சித்திரனாரின் கவிதை உள்ளிட்டவை அரசியல் நிகழ்வுகள் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னி ஆலைப் போராட்டம், எல்லைப் போராட்டம், வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் எனப் பல போராட்டங்களைக் குறித்த கவிதைகளையும் நூல் கவனமாக ஆராய்ந்துள்ளது.

1990இல் திருவல்லிக்கேணியில் நடந்த கலவரம் போன்ற சமகால நிகழ்வுகள் குறித்த கவிதைப் பதிவுகளும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. கும்பகோணத்தில் மகாமக விபத்து, பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து இரண்டையும், ‘கும்பகோணத்திற்கு/என்ன சாபமோ?/ஒன்று/நீர் கொல்கிறது/இல்லையென்றால்/நெருப்பு கொல்கிறது’ எனப் பதிவுசெய்யும் அப்துல்ரகுமானின் கவிதையைக் குறிப்பிட்டிருக்கிறார் ஆசிரியர். நாவரசு கொலை பற்றியும் ஆய்வு நீண்டுள்ளது. அறிஞர்களின் மேற்கோள்களுடன் ஆய்வைத் திடமாகச் செய்துள்ளார் வீரபாண்டியன். - விபின்

இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
வீரபாண்டியன்

பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 510
தொடர்புக்கு: 044 24330024

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in